ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் 20வயது மதிக்கத்தக்க மக்னா யானை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வறட்சி நிலவும் போது, அங்கிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி, யானைகள் கூட்டமாக ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. ஒகேனக்கல் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக பிரிந்து, உணவு தேடி வனப்பகுதியில் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட சின்னாறு முத்தூர்பட்டி பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் ஒரு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் (பொ) ராஜ்குமார், கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்து கிடந்த யானையை பிரேத பரிசோதனை செய்து, பொக்லைன் மூலம் குழி தோண்டி வனப்பகுதியில் புதைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வனப்பகுதியில் இறந்து கிடந்தது 20வயது மதிக்கத்தக்க மக்னா யானை. கடுமையான வயிற்று வலியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ளாமலும், வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமலும் இந்த யானை உயிரிழந்துள்ளது,’ என்றனர்.

Related Stories:

>