×

கொரோனா தொற்று பரவலை தடுக்க திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர்: கொரோனா தொற்று பரவலை தடுக்க திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் சில கட்டுப்பாடுகளை விதித்து  வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளிலிலிருந்து வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. 65 வயத்திற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள் கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் திருக்கோயிலுக்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும்.

பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் எச்சில் உமிழ்வது, அசுத்தம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கால்களை நீரில் சுத்தம் செய்தும், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும், உடல் வெப்பநிலையை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பிறகு தான் கோயிலினுள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் அணிந்து வரும் காலணிகளை காலணி பாதுகாப்பு இடத்தில் தாங்களே சுயமாக வைத்து திரும்ப அணிந்து செல்ல வேண்டும். திருக்கோயிலின் வெளிப்புறம் மற்றும் வாகன நிறுத்துமிடத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

கோயில் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள கடைகளிலும் சிற்றுண்டி சாலைகளிலும், சமூக விலகல் விதிமுறைகளை எந்நேரமும் பின்பற்ற வேண்டும். பக்தர்கள் சுவாமி சிலைகளை தொடுவது தவிர்க்கப்பட வேண்டும். பக்தர்கள் தேங்காய், பூ,பழம் ஆகியவற்றை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இயல்புநிலை திரும்பும் வரை அங்கபிரதட்சணம் போன்ற மெய்வருத்தி செய்யும் வேண்டுதல்களை தவிர்க்க வேண்டும். முடிகாணிக்கை செலுத்துமிடங்களில் அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

கோயிலில் நடைபெறவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் திருவீதி உலாக்கள் போன்றவற்றில் அரசின் நிலையான இயக்க நடைமுறை அமலில் உள்ளதால் கோயில் பழக்கவழக்கப்படியும், ஆகமவிதிப் படியும் பூஜை கைங்கர்யங்கள் நடைபெறும். மேற்படி பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பூஜைகள் முடிந்த பின்னர் சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் பக்தர்கள் தங்கி இளைப்பாற அனுமதி இல்லை. 5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Thiruchendur temple , Control of devotees at Thiruchendur temple to prevent the spread of corona infection: Temple administration announcement
× RELATED தூத்துக்குடி புதிய பேருந்து...