நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் நோயாளி உயிரிழந்தாரா?!: விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

நாகை: நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஊழியரின் அலட்சியம் காரணமாக ஆக்சிஜன் தடைப்பட்டதால் மூதாட்டி உயிரிழந்ததாக கூறி நள்ளிரவில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகூரை சேர்ந்த ஓய்வுப்பெற்ற அஞ்சல் அதிகாரி எஸ்தர் ராணி, கொரோனா தொற்றுக்கு கடந்த 1ம் தேதி முதல் நாகை மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மாலை வேளையில் கொரோனா பிரிவில் ஆக்சிஜன் சப்ளை திடீரென குறைந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருடன் சிகிச்சைபெற்று வரும் மேலும் பல நோயாளிகளும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதாக தெரிகிறது.

அப்போது தான் ஆக்சிஜன் சப்ளையை கண்காணிக்க வேண்டிய ஊழியர் பணியில் இல்லாதது தெரியவந்தது. பணி நேரத்தில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் உள்ளே வந்த மருத்துவமனை ஊழியருடன் நோயாளிகளின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மருத்துவரிடமும் அவர்கள் முறையிட்டனர். பணியில் அலட்சியமாக இருந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற மோசமான நிகழ்வுகள் இனியும் நடந்துவிட கூடாது என்றும் அவர்கள் வலியறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்க மருத்துவர் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்நிலையில்  நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளி இறந்தது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

விரிவான விசாரணை நடத்த நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவமனையில் நடந்தது என்ன?, பணியில் இருந்த ஊழியர்கள், மருத்துவர்கள், ஆக்சிஜன் கையிருப்பு பற்றி விளக்கம் தரவும் ஆணை பிறப்பித்துள்ளார். விசாரணையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் தான் நோயாளி உயிரிழந்தார் என்பது உறுதிசெய்யப்பட்டால் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். ஆட்சியரின் உத்தரவை அடுத்து இன்று பிற்பகலில் விசாரணை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More
>