வாக்குப்பதிவு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்ற விவகாரம்: தேர்தல் பணியாளர்கள் 4 பேருக்கு கொடுக்கப்பட்ட சம்மனை வாபஸ் பெற்றது போலீஸ்

சென்னை: தேர்தல் பணியாளர்கள் 4 பேர் இன்று காலை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் சம்மன் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட தரமணி 100 அடி சாலையில் அமைந்துள்ள இந்திரா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் இருந்து கடந்த 6-ம் தேதி 3 ஊழியர்கள் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை எடுத்து சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். வேளச்சேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தேர்தல் ஆணைய அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் என தெரியவந்தது.

மேலும் இந்த இயந்திரம் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரியவந்தது. இருந்தாலும் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் பைக்கில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு சென்றதால் சென்னை தேர்தல் அதிகாரி பிரகாஷ் உத்தரவுபடி இரண்டு மாநகராட்சி ஊழிர்கள், ஒரு மெட்ரோ வாட்டர் பணியாளர் உட்பட 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், வேளச்சேரி தொகுதி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், பைக்கில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்த இந்திரா பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர்கள் வேளாங்கண்ணி, சரவணன், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வாசுதேவன் உட்பட 4 பேர் வரும் 12ம்தேதி காலை 10 மணிக்கு வேளச்சேரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும் படி வேளச்சேரி போலீசார் 4 பேருக்கும் சம்மன் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் 4 பேருக்கு கொடுக்கப்பட்ட சம்மனை போலீசார் திரும்ப பெற்றனர். தேர்தல் ஆணையமும் விசாரணை அறிக்கையை பெற்று டெல்லிக்கு அனுப்பியதால் சம்மன் திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories:

>