ஐதராபாத்தை சிரமமின்றி வீழ்த்தி ஐபிஎல் தொடரில் தனது 100வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஐபில் தொடரின் 3வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 2021 ஐபில் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. இந்த வெற்றி கொல்கத்தா அணியின் ஐபில் வரலாற்றில் 100வது வெற்றி என்பது கூடுதல் தகவல். நிதிஷ் ராணா, பங்கஜ் திரிபாதி இணையின் அற்புதமான பேட்டிங் மற்றும் கொல்கத்தா பௌலர்களின் சாமர்த்தியமான பௌலிங் இவை இரண்டும் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணிகளாக அமைந்தது.

ஸ்கோர் கார்டு விவரங்கள்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 20ஓவர், 187/6

நிதிஷ் ராணா - 80 (56), ராகுல் திரிபாதி - 53 (29).

ரஷீத் கான் - 4.0/24/2, முகமத் நபி - 4.0/32/2

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 20ஓவர், 177/5

மனிஷ் பாண்டே - 61*(44), ஜானி பைர்ஸ்டோ - 55 (40),

பிரசித் கிருஷ்ணா - 4.0/35/2

டாஸ் மற்றும் அணித்தேர்வு:

டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார். ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் எடுக்கப்படவில்லை. கேப்டன் வார்னர், சமீபத்தில் இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடரில், தொடர்நாயகன் விருது பெற்ற ஜானி பைர்ஸ்டோ, ஆப்கான் அணியை சேர்ந்த ரஷீத் கான் மற்றும் முகமத் நபி ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாகவும் ரித்திமான் சாஹா, மனிஷ் பாண்டே, அப்துல் சமாட், விஜய் ஷங்கர், புவனேஸ்வர் குமார், டி நடராஜன், சந்தீப் ஷர்மா ஆகியோர் இந்திய வீரர்களாவும் இறுதி லிஸ்ட் அமைந்தது. என்ன தான் அணியின்-சமநிலை என்று காரணம் கூறினாலும் கேன் வில்லியம்சன் போன்ற வீரரை அணியில் சேர்க்காமல் விளையாடுவது பெரும் துரதிஷ்டம் தான். கிட்டத்தட்ட 7 வீரர்கள் பௌலிங் போடக்கூடிய அணியாக தெரிந்தாலும், பேட்டிங் கொஞ்சம் பலம்குறைந்தே தோன்றியது. கொல்கத்தா, கேப்டன் ஈயின் மோர்கன், பேட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரசல், சாகிப் அல் ஹசன் ஆகிய 4 அயல்நாட்டு வீரர்களையும், ஷுபமான் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, ஆகிய 6 இந்திய வீரர்களுடன் 7 வீரராக, கொல்கத்தா அணிக்கான தன் முதல் போட்டியில் சேர்த்தார் ஹர்பஜன் சிங். பௌலிங், பேட்டிங் இரண்டிலும் சமநிலை பெற்ற அணியாகவே தோன்றியது.

முதல் இன்னிங்ஸ் - ராணா , திரிபாதி கலக்கல்

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுபமான் கில், நிதிஷ் ராணா இறங்கினர். நிதிஷ் ராணா தொடக்கம் முதலே அடித்து ஆட துவங்கினார். மறுமுனையில் கில் நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்தார். பவர்பிலே முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணியின் பௌலர்களே அந்த அணியின் பெரும் பலம். ஆனால் நேற்று புவனேஸ்வர் ஆரம்பித்து சந்தீப் ஷர்மா, நடராஜன் என்று அனைத்து வேக/மித வேக  பௌலர்கள் அனைவரையும் தொடக்கம் முதலே அடித்து ஆடி அவர்களை ஒரு லெங்த்தில் செட்டில் ஆக விடாமல் அணியின் ஸ்கோரை மடமடவென உயர்த்தினார் ராணா. நடராஜன் வீசிய முதல் பந்தை கில் சிக்ஸர் பறக்கவிட்டார்.

ஆப்கான் பௌலர்களான ரஷீத் கான், முகமத் நபி இருவர் மட்டுமே கொல்கத்தா அணியின் அதிரடியை ஓரளவேனும் கட்டுப்படுத்தினர். ரஷீத் கான் வீசிய முதல் ஓவேரிலே கில் பௌல்டு ஆகி வெளியேறினார். அதன் பிறகு வந்த திரிபாதி ராணா உடன் இணைந்தது தான் ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் மாற்றியது. ரஷீத் கான் ஓவரை மட்டும் கவனமாக கையாண்ட இருவரும் மற்ற அனைத்து பௌலர்களையும் அடித்து நொறுக்கினர். அதிரடியாக விளையாடிய திரிபாதி 29 பந்துகளில் 53 ரன்கள் குவித்து நடராஜன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். 15 ஓவர் முடிவில் 145/1 என்ற நிலையில், கொல்கத்தா 200 ரன்களை தாண்டும் வாய்ப்பும் இருந்தது.

அதன் பிறகு தனது மீதம் 2 ஓவர்களை வீசிய ரஷீத் கான் ஆண்ட்ரே ரஸ்ஸல் விக்கெட்டை சாய்த்து கொல்கத்தா அணியின் வேகத்தை கட்டுப்படுத்தினர். அடுத்த ஓவர் வீசிய நபி, 56 பந்துகளில் 80 ரன்கள் குவித்த ராணாவின் விக்கெட்டையும், மோர்கன் விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி கொல்கத்தா அணியின் இறுதிகட்ட அதிரடிக்கு ஒரு பெரிய கடிவாளம் கட்டினார். நடராஜன் தனது இறுதி ஓவரை நன்றாக வீச கொல்கத்தா 15 ஓவர் 145 இல் இருந்து 19 ஓவர் 171 மட்டுமே எட்டியது. கடைசி ஓவர் பந்து வீசிய புவனேஸ்வர் குமார் பௌலிங்கில் ஒரு மினி அதிரடி ஆடினார் தினேஷ் கார்த்திக். 9 பந்துகள் சந்தித்து 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 187 எடுத்து சென்றார்.

முதல் இன்னிங்ஸ் முடித்து பேசிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் திரிபாதி பிட்ச் சற்று மெதுவாக உள்ளதாகவும், பந்து பிட்சில் ஹோல்டு ஆகி மெதுவாக வருவதாகவும் 187 நிச்சயம் வெற்றி பெறுவதற்கு போதுமான டோட்டல் எனவும் கூறினார். பிட்சின் தன்மை அறிந்து பந்துவீசினால் எளிதில் வெற்றி பெறலாம் என்று முடித்தார்.

இரண்டாம் இன்னிங்ஸ் - பேட்டிங் ஆழமின்றி தடுமாறிய ஹைதராபாத்:

188 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பேட்டிங் தொடங்கிய ஹைதராபாத் அணியை முதலில் இருந்தே கண்ட்ரோல் செய்தது கொல்கத்தா பௌலிங். டேவிட் வார்னர் விக்கெட்டை இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா வீழ்த்த, சாஹாவின் விக்கெட்டை ஷாகிப் அல் ஹசன் வீழ்த்த 10 ரன்களுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இழந்தது ஹைதராபாத் அணி. அதன் பிறகு ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே, ஜானி பைர்ஸ்டோவ் இணை பொறுப்பான ஆட்டைத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் பிறகு மொத்த ஆட்டத்தையும் வழிநடத்தும் அளவு பெரிய பேட்ஸ்மேன் இல்லாதது இவர்கள் இருவரையும் மிகவும் கவனமாக விளையாட வைத்தது. இதனை அறிந்து சாமர்த்தியமாக பந்து வீசிய கொல்கத்தா பௌலர்கள் தேவைபடும் ரன்-ரேட் அளவை ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுக்கும் அளவிலே இருக்குமாறு ரன்களை கட்டுப்படுத்தி பந்துவீசினார்.

பொறுப்பாக விளையாடிய பைர்ஸ்டோவ் 40 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து பேட் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த முகமத் நபி, விஜய் ஷங்கர் ஆகியோரால் பெரிய அளவில் வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் அளவு அதிரடியாக விளையாட முடியவில்லை. ஒரு பக்கம் மனிஷ் பாண்டே மட்டும் போராடி கொண்டு இருக்க, அப்துல் சமாட் ஒரு மினி அதிரடி காட்டினார். கம்மின்ஸ் பந்து வீச்சில் இரண்டு சிக்ஸர் அடித்து தன்மீது அனைவர் பார்வையும் திருப்பினார். ஆனாலும் வெற்றியை பறிக்க அவரது அதிரடி போதுமானதாக இல்லை. 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி  177/5 என்று முடித்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.

வெற்றி காரணிகள்:

போட்டி முடிந்து பேசிய ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், இந்த பிட்சை சரியாக தங்கள் அணி  மதிப்பிடவில்லை என ஒப்புக்கொண்டார்.  எங்களை விட எதிரணியினர் பிட்சின் தன்மை அறிந்து ஆடினர் அதுவே எங்கள் தோல்விக்கு காரணம். எனினும், அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். கொல்கத்தா அணி வீரர்கள் பேசுகையில் போட்டிக்கு முன்னதாக நடந்த 10 நாள் கேம்ப் மிகவும் உபயோகமாக இருந்ததாகவும், போட்டிக்கு தயாராக அது உதவியதாகவும் கூறினார். கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பேசுகையில், நிதிஷ் ராணா - திரிபாதி இணையின் அதிரடி பேட்டிங் தான் வெற்றிக்கான முக்கிய காரணம் எனவும், ஹர்பாஜன் சிங்கின் இந்த சென்னை மைதானம் பற்றிய அனுபவம் பெரிதும் உதவியாதவும் கூறினார்.

நிதிஷ் ராணா - ராகுல் திரிபாதி இணையின் அதிரடி பேட்டிங், கொல்கத்தா அணி வீரர்களின் சாமர்த்தியமான பௌலிங் இரண்டும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. ஹைதராபாத் பொறுத்தவரையில் வில்லியம்சன் விளையாட வைக்க வேண்டிய நிலை உள்ளது. அவரது வருகை பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கும். முதல் 4 வீரர்களுக்கு பிறகு பேட்டிங் செய்ய பெரிய பேட்ஸ்மேன் இல்லாதது மேலே விளையாடும் 4 வீரர்களின் அதிரடியை குறைக்கிறது. அடுத்த போட்டியில் இதை சரிசெய்யுமா ஹைதராபாத் அணி என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இன்றைய போட்டி:

இன்று மும்பையில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி எதிர்கொள்கிறது.

Related Stories:

>