கோவையில் இரவு 10 மணிக்கு மேல் ஓட்டலில் சாப்பிட்டதால் பெண்கள், ஊழியர்கள் மீது போலீசார் சரமாரி தாக்குதல்..!!

கோவை: கோவை காந்திபுரத்தில் 10 மணிக்கு உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பொதுமக்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர். போலீசார் தாக்கியதில் பெண் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் கட்ட அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேரங்களில் கடைகளை அடைக்கும்படி போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் இரவு 10 மணிக்கு மேல் கடை மூடப்பட்டுள்ளது.

அச்சமயம் பேருந்து நிலையம் வந்த பெண்கள் சிலர் உணவு வேண்டும் என கேட்டதன் காரணமாக கடை திறக்கப்பட்டு உணவு அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த உதவி ஆய்வாளர் ஒருவர் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அங்கு இருந்த ஒரு பெண்மணி மீதும் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஓட்டலில் இருந்து கலைந்து சென்ற காவலர்கள் தொடர்ந்து 10 மணிக்கு மேல் கடைகளை திறக்கக்கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உணவாக உரிமையாளர் கூறும் போது தொற்று பரவல் காலத்தில் உணவகம், தேநீர் விடுதி உள்ளிட்டவை திறக்க 11 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் 50 சதவீத நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என வரைமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 10 மணிக்கு வந்து கடைகளை மூட சொல்லி வற்புறுத்தியது மட்டுமின்றி சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார். காவலர் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஓசூரை சேர்ந்த பெண்மணி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>