×

தென்னிந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட நகரமாக மாறிய பெங்களூரு: மேலும் 5 புதிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு திட்டம்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் உள்ள சூழலில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 புதிய தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டுக்கு மேலாக அமெரிக்கா, பிரேசில் உள்பட உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரசின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று தணிந்திருந்த நிலையில் அண்மை காலமாக தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, சட்டீஷ்கர், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 50 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காததே இதற்கு காரணம் என்று மத்திய குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள மகாராஷ்டிராவில் நேற்று 63,794 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே காணொலி காட்சி வாயிலாக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை மறுநாள் முதல் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. உத்திரப்பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளதால் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், முகக்கவசம், கிருமிநாசினி, ஆகியவற்றை பயன்படுத்துவதோடு தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தில் 5,469 பேரும், கர்நாடகாவில் 10,250 பேரும், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெங்களுருவில் 7,584 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளனர். இதனால் தென் இந்தியாவில் அதிக வைரஸ் பாதிப்பு கொண்ட நகரமாக பெங்களூரு மாறியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்க்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பண்பாட்டில் உள்ள நிலையில் அவற்றின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய ரஷ்யாவின் sputnik, johnson and johnson, novavax, sides cadila, intranasal ஆகிய 5 தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் அவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Tags : Bangalore ,South India , Bangalore has become the most vulnerable city in South India: the central government plans to approve 5 more new vaccines ..!
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...