சிபிஎஸ்இ தேர்வை கேன்சல் பண்ணுங்க..'.. மத்திய அரசுக்கு, பிரியங்கா கடிதம்..சகோதரிக்கு ராகுல் காந்தி ஆதரவு!

டெல்லி : கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்லை என்பதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்தி, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்

நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், குழந்தைகளை தேர்வு எழுத வைப்பது அவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு மையத்தில் நிறைந்த குழந்தைகளுக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டு அது தீவிர பகுதியாக மாறினால் அதற்கு மத்திய அரசும் சிபிஎஸ்இ வாரியமும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி நோயால் கடுமையாக பாதிக்கக் கூடிய மாணவர்களுக்கோ அல்லது பிறருக்கோ ஏற்படுகிற பாதிப்புக்கு மத்திய அரசும் சிபிஎஸ்இ வாரியமும் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க பரிசீலிக்க விரும்புகின்றனவா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டம் கூடுகிற தேர்வு மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே பிரியங்கா காந்தியின் கருத்துக்கு அவரது சகோதரரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பேரழிவு தரும் கொரோனா 2வது அலையில் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். கடுமையான முடிவுகளை எடுப்பதற்கு முன் அனைத்து தரப்பினரையும் அரசு கலந்தாலோசிக்க வேண்டும். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்துடன் மத்திய அரசு எத்தனை எண்ணிக்கையில் விளையாட விரும்புகிறது? என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>