×

சட்டசபை தேர்தல் முடிந்த பின் அம்பத்தூர் தொகுதியில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா: 2 அதிமுகவினர் சிக்கினர்

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, அம்பத்தூர் தொகுதியில் நேற்று வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 அதிமுகவினர் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுவீடாக பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட அவர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் ஜோசப் சாமுவேல் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அலெக்‌சாண்டர், அமமுக சார்பில் வேதாச்சலம், மக்கள் நீதி மய்யம் சார்பில் வைத்தீஸ்வரன், நாம் தமிழர் சார்பில் அன்பு தென்னரசன் ஆகியோர் போட்டியிட்டனர்.

அம்பத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பல்வேறு இடங்களில் பணப் பட்டுவாடா செய்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து சோதனையை முடுக்கினர். இதனால் அதிமுகவினர் பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்ய முடியாமல் திரும்பி சென்றனர். மேலும் அதிமுகவுக்கு வாக்களித்தால் தேர்தல் முடிந்த பிறகு பணம் தருவதாக பலரிடம் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6.39 மணியளவில் பாடி சீனிவாசன்நகர், சக்தி தெருவுக்கு இரண்டு அதிமுக தொண்டர்கள் பைக்கில் வந்தனர். பின்னர் அவர்கள் வாக்காளர் களின் பெயர், போன்நம்பர் அடங்கிய பட்டியலை எடுத்து அங்கிருந்த வீடுகளில் உள்ள வாக்களர்களுக்கு தலா ₹500 வீதம் விநியோகம் செய்தனர்.

இந்த தகவல் அந்தப்பகுதி திமுகவினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து திமுக நிர்வாகிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பணப்பட்டுவாடா செய்துகொண்டிருந்த இரண்டு அதிமுகவினரையும் பிடித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் பாடி டிஎம்பி நகரை சேர்ந்த வெங்கடேசன் (29), தாமோதரன் (29) என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ₹14,000 ரொக்கப் பணம், பணப்பட்டுவாடா பட்டியல், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Ambatur , In Ambattur constituency after the assembly elections No money for the voter: 2 supremacists caught; Excitement in Chennai
× RELATED அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில்...