×

எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம் பார்த்து சூதானமா நடந்துக்க... இந்தியாவுக்கு சீனா அறிவுரை: 11ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

புதுடெல்லி: ‘படைகளை வாபஸ் பெறுவதில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்று சீனா அறிவுரை வழங்கியுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் சீனா படைகள் செய்த ஆக்கிரமிப்பு காரணமாக, கடந்த பல மாதங்களாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதற்கு தூதரக ரீதியாகவும், ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் மூலமாகவும் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 9ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் இருந்து இருநாட்டு ராணுவமும் வாபஸ் பெற்றன.

அதேபோல், காக்ரா, ஹாட் ஸ்பிரிங், டெப்சாங் உள்ளிட்ட இடங்களில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக, இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 11வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 9ம் தேதி தொடங்கியது. 12 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் புதிய முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இது பற்றி இந்திய ராணுவம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘படைகளை வாபஸ் பெறும் விவகாரத்தில் சீன தரப்பினர் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்ட மனநிலையில் வந்ததால், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அவர்கள் தங்களின் பேச்சில் எந்த தாராளத்தையும் காட்டவில்லை,’ என கூறப்பட்டது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சீன ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டதால் நேர்மறையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. படைகளை வாபஸ் பெறுவதிலும், எல்லையில் அமைதி நிலவுவதற்கும் இந்த சாதகமான சூழ்நிலையை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்கு, கடந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், ஒருமித்த கருத்துகளை பின்பற்ற வேண்டும். அதை நோக்கியே முன்னேற வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : China ,India , China advises India on 11th phase of talks, failed
× RELATED சொல்லிட்டாங்க…