ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் நிறுத்தம்: கொரோனா தடுக்க நடவடிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்றுடன் இலவச தரிசன டிக்கெட் வினியோகம் நிறுத்தப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆந்திராவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசன டிக்கெட் கடந்த ஒரு வாரமாக 23 ஆயிரம் டிக்கெட்டுகளில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை மற்றும் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் வழங்கப்பட்டது.

இந்த டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் இன்று தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கிடையில், கொரோனா பரவல் காரணமாக நேற்று வரை மட்டுமே இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்தது. இதனால், பக்தர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதே வேளையில் நேற்று முதல் கவுன்டர்களில் இலவச தரிசன டிக்கெட் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் இலவச தரிசனம் கிடையாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

* 49,751 பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 49 ஆயிரத்து 751 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதில் 26 ஆயிரத்து 157 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். மேலும் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.1.91 கோடி காணிக்கை கிடைத்தது.

Related Stories:

>