×

ஆரணி அருகே பணம் பறித்து தப்பியவர்களை மக்கள் விரட்டியபோது மரத்தில் பைக் மோதி கொள்ளையன் பலி: காவல் நிலையம் முற்றுகையால் பரபரப்பு

ஆரணி: ஆரணி அருகே டிராக்டர் டிரைவரை தாக்கி பணம் பறித்து தப்பியபோது, மரத்தில் பைக் மோதியதில் கொள்ளையன் இறந்தான். இந்நிலையில் அவரை அடித்து கொன்றதாக காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் மோகன்(23). இவர் வைக்கோல் உருட்டும் டிராக்டர் டிரைவராக உள்ளார். கடந்த சில வாரங்களாக ஆரணி அடுத்த வேலப்பாடி ஊராட்சியில் அறுவடையான வயல்களில் டிராக்டர் எடுத்து வந்து வேலை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி வேலையை முடித்துவிட்டு பலாந்தாங்கள் கூட்ரோட்டில் உள்ள கோயில் அருகில் டிராக்டரை நிறுத்திவிட்டு, இரவு தூங்கிக் கொண்டிருந்தார்‌. அப்போது அங்கு வந்த 3 பேர் மோகனை தாக்கி ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரட்டி சென்றனர்.

அப்போது ஆரணி- வந்தவாசி செல்லும் சாலையில் ஒரு மரத்தில் பைக் மோதி கொள்ளையர்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர். ஆனாலும் காயங்களுடன் 3 பேரும் தப்பிச்சென்றனர். இதுகுறித்து மோகன் புகாரின்படி ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், ஆரணி, புனலப்பாடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(27), ஆரணிபாளையத்தை சேர்ந்த சூர்யா(25), பலாந்தாங்களை சேர்ந்த மணி(எ) மணிகண்டன்(23) ஆகியோர் பணம் பறித்ததும் தப்பிச் செல்லும்போது மரத்தில் பைக் மோதி படுகாயமடைந்த சக்திவேல் ஆரணி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றதும், நேற்று முன்தினம் இரவு இறந்ததும் தெரியவந்தது. சக்திவேலின் கூட்டாளிகள் சூர்யா, மணிகண்டன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், சக்திவேலை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் முன்விரோதம் காரணமாக தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சக்திவேலின் தாய் அலமேலு கடந்த 8ம் தேதி ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சக்திவேலின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆரணி நகர காவல்நிலையத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். ஏடிஎஸ்பி அசோக்குமார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சக்திவேலின் தாய் அலமேலு, ‘‘என் மகனை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாலுகா போலீசில் புகார் அளித்தும் இதுவரை, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் எஸ்எஸ்ஐ ஷாபுதீன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கொலை வழக்கை, விபத்து வழக்காக பதிவு செய்து, குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த வேலு, கிருஷ்ணன், பரசுராமன் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Arani , Bike crashes into tree as people chase escapee near Arani
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...