×

ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மும்பையில் இன்று மோதல்

மும்பை: விக்கெட் கீப்பர்களின் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மும்பையில் இன்று மோதுகின்றன. ஐபிஎல் டி20 தொடரின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் அணியால், அதன் பிறகு ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பதுடன் பைனலுக்கு கூட முன்னேற முடியாதது சோக வரலாறாக உள்ளது. அடிக்கடி அணியில் மாற்றம், கேப்டன் மாற்றம் என்று மாற்றத்திற்கு பஞ்சமில்லாத அணியாக ராஜஸ்தான் திகழ்கிறது. 14வது சீசனுக்கான ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பொறுப்பேற்றுள்ளார். அதிக விலைக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ் (ரூ.16.25 கோடி), ஷிவம் துபே (ரூ.4.40 கோடி) ஆகியோருடன் ஸ்டோக்ஸ், பட்லர், ஆண்ட்ரூ டை, ஆர்ச்சர், மில்லர், உனத்கட், ராகுல் திவாதியா, ஷ்ரேயாஸ் கோபால், முஷ்டாபிசுர் ரகுமான், லிவிங்ஸ்டோன், ஜெய்ஸ்வால் என திறமையான வீரர்கள் ராயல்ஸ் அணிக்காக களம் காண்கின்றனர்.

அதனை எதிர் கொள்ள விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் தயாராக இருக்கிறது. பெயர் மாற்றத்துடன் களம் காண உள்ள பஞ்சாப் அணியில் வீரர்களும் மாறியிருக்கிறார்கள். ரைலி மெரிடித் (ரூ.8 கோடி), தமிழக வீரர் ஷாருக் கான் (ரூ.5.75 கோடி), பேபியன் ஆலன் (ரூ.75லட்சம்) புதுமுகங்களாக களம் காண உள்ளனர். அவர்களுடன் கிறிஸ் கேல், நிகோலஸ் பூரன், முருகன் அஷ்வின், முகமது ஷமி, மயாங்க் அகர்வால், தீபக் ஹூடா, கிறிஸ் ஜார்டன் போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்களும் அடித்து நொறுக்க காத்திருக்கின்றனர். இன்றைய மோதலில் எந்த விக்கெட் கீப்பரின் அணி முதல் வெற்றியை சுவைக்கப் போகிறது என்பதும் சுவாரசியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இதுவரை மோதியதில்...
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை ராஜஸ்தான் 11 தொடர்களிலும், பஞ்சாப் 13 தொடர்களிலும் விளையாடி உள்ளன. இரு அணிகளும் மோதிய 21 ஆட்டங்களில் ராஜஸ்தான் 12-9 என முன்னிலை வகிக்கிறது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு இந்த அணிகள் கடைசியாக மோதிய போட்டியில் ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக ராஜஸ்தான் 226 ரன், பஞ்சாப் 223 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 124, ராஜஸ்தான் 112 ரன்னில் சுருண்டுள்ளன.

Tags : Royals ,Punjab Kings ,Mumbai , Royals - Punjab Kings clash in Mumbai today
× RELATED பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ்