×

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த திருவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் பலி: அதிமுக, இந்திய கம்யூ, பா.ஜ வேட்பாளர்களுக்கும் தொற்று உறுதி

மதுரை: கொரோனா பாதிப்புடன் 23 நாட்கள் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரவி, அரவக்குறிச்சி பாஜ வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்கும் கொரோனா உறுதி ெசய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சட்டமன்றத்தொகுதி (தனி), திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ்  (63) அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, தேர்தல் பிரசாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். மார்ச் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து 2 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 20ம் தேதி காலை, திருவில்லிபுத்தூரில் நடந்த கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போதே அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்றே மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவருக்கு கொரோனா ெதாற்று உறுதியானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்று காரணமாக அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், 3 தினங்களுக்கு முன்பு மாதவராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செயற்கை சுவாச கருவிகள் ெபாருத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் தொடர்ந்தன. இந்நிலையில், சிகிச்சைபலனின்றி நேற்று காலை 7.50 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை, மதுரை மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் திருவில்லிபுத்தூர் காதிபோர்டு காலனியில் உள்ள  வீட்டுக்கு நேற்று மதியம் கொண்டு வந்தனர். வேட்பாளர் மாதவராவ் உடலுக்கு உறவினர்கள் மற்றும் மதுரை, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அரசு வழிகாட்டுதல் படி திருவில்லிபுத்தூர் காதிபோர்டு காலனியில் உள்ள மயானத்தில், இன்று காலை 10 மணியளவில் மாதவராவ் உடல் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். மாதவராவ், விருதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பில் 1957ல் பிறந்தார். இவரது இயற்பெயர்  செல்லத்துரை. எம்ஏ, பி.எல் முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.  எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். சென்னை அய்யப்பபாக்கத்தில் வசித்து வந்த  இவர், பெட்ரோல் பங்க் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் செய்து வந்தார். இவரது  மனைவி சீதை, அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் 2015ல்  காலமாகி விட்டார். இவரது மகள் திவ்யா ராவ், திருமணமானவர்.  சென்னையில்  வசித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் திருவில்லிபுத்தூர் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டு வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் முடிவு வரும் முன்னரே கொரோனா பாதிப்பு காரணமாக மாதவராவ் இறந்தது திருவில்லிபுத்தூர் பகுதி வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அதிமுக ேவட்பாளர்: திருப்பூர், முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன். இவர், பல்லடம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவருக்கு நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கம்யூ. வேட்பாளர்: திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான ரவி (எ) சுப்பிரமணியத்துக்கு (64), சளி, காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பாஜ வேட்பாளர் அண்ணாமலை: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழக பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். இவர், தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், கட்சி பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் கோவையில் இருந்த அண்ணாமலைக்கு கொரோனா தொற்று நேற்றுமுன்தினம் இரவு உறுதியானது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இடைத்தேர்தல் வருமா?
வேட்பாளர் மரணத்திற்கு முன்னரே வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டதால், திருவில்லிபுத்தூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு நேற்று தெரிவித்துள்ளார். திருவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ்தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அப்படி அவர் வெற்றி பெற்றால், திருவில்லிபுத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தைக்காக மகள் பிரசாரம்
தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மகள் திவ்யா ராவ், 8 மாத கைக்குழந்தையுடன்  திருவில்லிபுத்தூர் வந்தார். இங்கு அவர் தந்தைக்காக தினமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரும், திருவில்லிபுத்தூர் வந்து, மாதவராவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



Tags : Srivilliputhur Congress ,AIADMK ,Indian Communist Party ,BJP , Who had been receiving treatment for corona infection Srivilliputhur Congress candidate killed: AIADMK, Indian Communist Party, BJP candidates confirmed infection
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...