×

கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்தால் கோடி நன்மை: வேளாண் அதிகாரி ஆலோசனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில்; கோடையில் பெறப்படும் மழையினைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொண்டு விவசாயிகள் பயனடைய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்;ட வேளாண்மை இணை இயக்குநர் ராம. சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் பங்குனி - சித்திரைப் பட்டங்களில் பெறப்படும் கோடை மழையினைப் பயன்படுத்திக் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில், நமது பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்குச் செல்லும்பொழுது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதிப் படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர்சூழ் மண்டலத்திற்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாக விடாமல் இப்புழுதிப் படலம் தடுத்து விடும்.

சித்திரை மாதத்துப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்” என்பது கிராமத்துப் பழமொழி. கோடை மழையின் ஈரத்தைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் நன்மைகள் பல கிடைக்கும்.கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது. இதனால் மண் வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்ந்துவிடும். எனவே, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். கோடை உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும். வயலிலுள்ளக் களைகள் குறிப்பாக, கோரை போன்ற களைகள் கோடை உழவு செய்வதனால் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டுவரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில்நுட்பமாகும். கோடை உழவு செய்வதனால் நிலத்தினடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள்; வெளியில் கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகிறது.

மிக முக்கியமாக மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழுவினை கட்டுப்படுத்திட கோடை உழவு மிகவும் சிறந்தது . இதனால் வரும் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறைகிறது. கோடை உழவினைச் சரிவிற்குக் குறுக்கே உழும்பொழுது மண் அரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத நிலத்தில் நீர் வேகமாக வழிந்தோடி மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது.இவ்வாறு பல நன்மைகள் கோடை உழவினால் ஏற்படுவதால் ‘கோடை உழவு கோடி நன்மை” எனக் கூறப்படுகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்; கோடையில் பெறப்படும் மழையினைப் பயன்படுத்தித் தங்களது நிலங்களில் மழை நீரை சேமித்திடவும், பூச்சி நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்திடவும் கோடை உழவு செய்திடலாம் என அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Cody , Summer rains, if plowed, benefit the crore
× RELATED ஹீரோ ஆனார்கள் கோபி, சுதாகர்