அதிரடி காட்டிய ஷிகர் தவான், ப்ரித்வி ஷா: சென்னையை துவம்சம் செய்த டெல்லி அணி..! ஐபில் 2வது போட்டி ஒரு அலசல்

தோனியும் - ரிஷப் பாண்டும்:

தோனி இந்திய அணிக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம். அவரது சாதனைகள் அளப்பரியது. இந்திய அணி உலகிற்கு காண்பித்த மிக சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி. இனி இந்திய அணியில் எந்த ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வந்தாலும் அவரது ஆட்டத்தின் உந்துதலும், பாணியும், உத்வேகமும் பார்த்து தனது ஆட்டத்தில் அதை நிச்சயம் சேர்த்து கொண்டு இருப்பர். அவர் நேரடியாக பார்த்து ஊக்கமளித்து மேம்படுத்தவில்லை என்றாலும், அவரது ஆட்டத்தின் மூலம் இந்திய

கிரிக்கெட் உலகில் இனி வரும் பல விக்கெட் கீப்பர் பாட்ஸ்மேன்களுக்கு மகேந்திர சிங் தோனி  ஒரு முன்னோடி.  அவ்வாறு அவரால் நேரடியாக கொம்பு சீவி வளர்க்கப்படவில்லை என்றாலும், அவரது ஆட்டத்தால் தூண்டுதல் அடைந்து தன்னை நிலைநாட்டி கொள்ள முயன்று வந்தான் ஒரு இளைஞன்.

தோனி ஓய்வு பெற்ற பின், அவரது இடத்தை யார் நிரப்புவார்கள் என்று பெரிதும் சோர்ந்து கிடந்த நிலையில் அணிக்குள் புயல் போல மற்றுமொரு வீரன் வந்தான். முதலில் சில கேட்ச்கள் தவறவிட்டது, முதிர்ச்சியற்ற ஆட்டம் என்று தடுமாறினான். தோனியும் தனது ஆரம்பகாலங்களில் இதுபோலவே இருந்தார் என்று மறந்த ரசிகர்கள், இறுதி கால தோனியை மட்டும் மனதில் வைத்து கொண்டு அந்த இளைஞனை வசைபாடினர். கோஹ்லி மற்றும் இந்திய அணி தொடர்ந்து அவனுக்கு பக்கபலமாக நிற்க தன்னை மேலும் மேலும் மெருகேற்றி இன்று மிரட்டலை நிற்கிறான் அந்த இளைஞன். அவனே ரிஷப் பண்ட். டெல்லி அணியின் கேப்டனாய் , தனது முன்னோடி தோனி முன்னாள் நின்றது, முன்னாள் அதிரடிக்காரனும் , இந்நாள் அதிரடிக்காரனும் நேருக்கு நேர் நின்றது போலவே இருந்தது.

டாஸ் மற்றும் அணித்தேர்வு:

டெல்லி அணி டாஸ் வெல்ல, அதன் கேப்டன் ரிஷப் பாண்ட் சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். டெல்லி அணியை பொறுத்தவரையில் கசிகோ ரபாடா, அண்ரிச் நொர்ட்ஜெ இருவரும் அவர்களது சென்ற சீஸனின் முக்கிய பௌலர்கள். அவர்கள் இருவரும் இன்னும் குவாரன்டைன்ல் இருப்பதால் எடுக்க இயலாது. ஷ்ரேயஸ் ஐயர் இடத்தை நிரப்ப  ஸ்மித் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஹானே, ஷ்ரேயாஸ் இடத்தை நிரப்ப, சென்ற சீசனில் ஓரளவிற்கு நன்கு செயல்பட்ட ஷிமரோன் ஹெய்ட்மர் சேர்க்கப்பட்டதால் ஸ்மித் ஆடும் வாய்ப்பில்லாமல் போனது.

தவான், ப்ரித்வி ஷா, ரிஷப் பாண்ட், ஷிமரோன் ஹெய்ட்மர், அஜின்கியா ரஹானே, மார்கஸ் ஸ்டோனிஸ், கிறிஸ் ஓக்ஸ், டாம் கரண், ரவி அஸ்வின், அமித் மிஷ்ரா, அவேஷ் கான் ஆகியோர் இறக்கப்பட்டனர். அமித் மிஷ்ரா டெல்லி அணிக்காக தனது 100வது ஐபில் போட்டியை இன்று விளையாடியது ஒரு முக்கிய சிறப்பம்சம் ஆகும். சென்னை அணி எதிர்பார்த்தது போல தோனி, ரெய்னா, ராயுடு, டு பிளெஸ்ஸிஸ், ருதுராஜ் கைக்கவாட், ஷரத்துல் தாகூர், தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா, ட்வயனே பிராவோ, சாம் கரண் இறக்கினர். இம்ரான் தாஹிர் பதிலாக மொயீன் அலி களமிறக்கப்பட்டார்.  

சென்னை பேட்டிங்: சுரேஷ் ரெய்னா, சாம் கரண் அதிரடி 188 ரன்கள் குவிப்பு:

பேட்டிங் தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்பித்திலேயே இடி இறக்கியது போல, தொடக்க ஆட்டக்காரர்களான டூ பிளெஸ்ஸிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், ருதுராஜ் கைக்கவாட் 5 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர். 3வது வீரராக களமிறங்கிய மொயீன் அலியும், 4வது வீரராக களமிறங்கிய ரெய்னாவும் சற்று திணறினாலும் சுதாரித்து கொண்டு ஸ்பின் பௌலர்களை அடித்து ஆட ஆரம்பித்தனர். சாஹல்

மற்றும் குலதீப் சமீபமாக நிறைய ரன்கள் விடுவதாலும், டெஸ்ட் போட்டிகளில் நன்றாக பௌலிங் செய்த அஸ்வின்க்கு டி20 வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், ரெய்னாவும் அலியும் சொல்லிவைத்தார் போல அஸ்வின் ஓவரை போட்டி போட்டு கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.

அலியின் விக்கெட்டை ஒரு வழியாக அஸ்வின் வீழ்த்தினாலும், ரெய்னா அவரை விடுவதாக இல்லை என்று அடித்து நொறுக்கினர். அதில் கிடைத்த ஒரு உத்வேகம் அதன் பின் வந்த அனைத்து பௌலர்களையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். ரெய்னா அதிரடியை குறைக்காமல் ஆடி அரை சதம் அடித்தார். மொயீன் அலி ஆட்டம் இழந்த பிறகு வந்த ராயுடு 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன் பின்னர் வந்த ஜடேஜாவும் ரெய்னாவும் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் துருதிஷ்டவசமாக ரெய்னா 36 பந்துகளில் 54 அடித்து இருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

ரெய்னா அலியுடன் சேர்ந்து 50 ரன்களும், ராயாடுவோடு சேர்ந்து 73 ரன்கள் பார்ட்னெர்ஷிப் போட்டனர்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புகளோடு இறங்கிய தோனி டக் அவுட் ஆகி திரும்பினார். அதன் பிறகு வந்த சாம் கரண் ஜடேஜா உடன் சேர்ந்து அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தனர். சாம் கரண் 15 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ஒரு காட்டு காட்டினார். மறுபுறம் ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து இருந்தார். இதன் மூலம் சென்னை

அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து 189 ரன்கள் இலக்காக கொடுத்தது.

டெல்லி அணியின் அபார பேட்டிங்: துவம்சம் செய்த ப்ரித்வி ஷா-ஷிகார் தவான் இணை

189 ரன்கள் என்ற கடிமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி ஆரம்பம் முதல் அதிரடி காட்ட துவங்கினர். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பெருமையுடன் களமிறங்கிய ப்ரித்வி ஷா ஆரம்பம் முதல் அனைத்து பௌலர்களையும் விளாசி தள்ளினார். பௌண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய தவானும் ஷாவிற்கு சளைக்காமல் பௌலர்களை அடித்து

நொறுக்கி நாலாபுறமும் சிதறடித்தார்.  ப்ரித்வி ஷா கொடுத்த ரெண்டு கேட்ச்களையும் சென்னை வீரர்கள் கோட்டைவிட்டனர். விக்கெட் இழப்பின்றி ஆட்டத்தை முடித்துவிடுவார்கள் என்று அனைவரும் சோர்ந்து நிற்க்கையில் அணி ஸ்கோர் 138 ஆக இருந்த போது 38 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த ப்ரித்வி ஷா ஆட்டமிழந்தார். அதன் பிறகும் ஷிகார் தவான் தனது  அதிரடியை குறைக்காமல் 54 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு மிக அருகாமையில் கொண்டு வந்து  சேர்த்துவிட்டு அவுட் ஆகி வெளியேறினார்.

 மிச்சம் இருந்த சொற்ப ரன்களை பாண்ட்டும், ஸ்டோனிசும் எடுக்க 18.3 ஓவர்களில் 189 என்ற இலக்கை எட்டி சென்னையை துவம்சம் செய்தனர். தோனியின் எந்த வியூகமும், பௌலர்களின் எந்த முயற்சியும் டெல்லி அணியை கட்டுப்படுத்த முடியவில்லை. காட்டாறு அடித்து செல்வது போல  அடித்து நொறுக்கினர் ஷா மற்றும் தவான் கூட்டணி. ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்து பேசுகையில் தோனி தன் பௌலர்கள் சரியான லெங்த் போடாததும் பின்பொழுதில் விழுந்த பனி பந்துவீச்சை மேலும் கடினமாக்கியதாகவும் கூறினார்.

தொடரின் ஆரம்பக்கட்டம் என்பதாலும் மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் பௌலர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் நம்பிக்கை அளித்தார். தனது ஆதர்சன தோனியின் முன்னாள் கேப்டனாக நின்று அவரது தலைமையிலான அணியை வென்றது பெருமையாக உள்ளது எனவும், இதே போல அதிரடி ஆட்டம் தொடரும் எனவும், போட்டியை 1 ஓவர் முன்னதாக முடிக்கவேண்டும் என்ற திட்டப்படி ஷாவும், தவானும் விளையாடியது மகிழ்ச்சி எனவும் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பாண்ட் கூறினார். ஐபில் 2021 தொடரின் 3வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

Related Stories: