வடமாநிலங்களில் ஊரடங்கால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் காடா துணி விற்பனை முடக்கம்: ரூ.100 கோடி மதிப்பிலான துணி தேக்கம்

சோமனூர்: வடமாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காடா உற்பத்தி துணிகள் விற்பனையாகாமல் ரூ.100 கோடி அளவில் தேங்கியுள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகக்கூடிய 20எஸ், 30எஸ், 50எஸ் மற்றும் 40எஸ் உள்ளிட்ட கிரே காடா காட்டன் துணியை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக பாலி, பலோத்ரா, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, மும்பை, கல்கத்தா, புனே, தமிழ்நாட்டில் ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மொத்த வியாபாரிகள் பெறப்பட்ட ஜவுளி துணியை தரம் பிரித்து, சாயம் ஏற்றுவது அச்சிடுவது, வெண்மைபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து அந்த துணிகளை உள்நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில்   கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு துணிகள் அனுப்பப்படுவதில்லை. ஒரு சில பகுதிகளில் துணி விலை குறைத்து கேட்கின்றனர். இதனால் 2 வாரங்களாக மொத்த வியாபாரிகள் படிப்படியாக குறைந்த அளவு துணியை மட்டுமே வாங்கினார்.

கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகரித்ததை அடுத்து ஜவுளி துணியை வாங்குவதை தற்போது முழுமையாக குறைத்து விட்டனர். இதனால் சுமார் 5 கோடி மீட்டர் கிரேட் காடா துணி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காடா உற்பத்தி துணிகள் விற்பனையாகாமல் ரூ.100 கோடி அளவில் தேங்கியுள்ளன. இது குறித்து சோமனூர் பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

 வட மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கிருந்து ஜவுளி துணியை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் முழுமையாக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உற்பத்தி ஆகக்கூடிய ஜவுளி துணி அந்தந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இருப்பில் வைத்து வருகின்றனர். இதனால் பணப்புழக்கம் முழுமையாக தடைபட்டுள்ளது.

விசைத்தறியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வங்கி கடன் செலுத்தவும், வாடகை, உற்பத்தி செலவினங்கள், வருமான வரி கட்டுவதும் உள்ளிட்ட செலவினங்களை செய்வதற்கு மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றோம். இதனால் ஜவுளி உற்பத்தியை முழுமையாக நிறுத்த வேண்டியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொரோனா வைரஸ் எதிரொலியால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு வெளி மாநிலங்களில் துணி விற்பனையாகாமல் கோடிக்கணக்கில் தேங்கியுள்ளன.  இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுடைய நிலைமையை சரிசெய்ய உற்பத்தியை முழுமையாக குறைக்க திட்டமிட்டு வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளர்களுக்கு பாவு நூல் கிடைக்காமல் படிப்படியாக விசைத்தறி நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகரித்ததை அடுத்து ஜவுளி துணியை வாங்குவதை தற்போது முழுமையாக குறைத்து விட்டனர். இதனால் சுமார் 5 கோடி மீட்டர் கிரேட் காடா துணி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.

Related Stories:

>