×

இலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியா - இலங்கை இடையே இருதரப்பு சிறப்பு சர்வதேச பயணிகள் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது வரை அந்த தடை தொடர்கிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன. பின்னர், ஜூலை மாதம் முதல் இரு தரப்பு நாடுகளுக்கு இடையே சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டன.இந்த சிறப் பு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையே சிறப்பு சர்வதேச பயணிகள் விமானத்தை பாதுகாப்பு நடைமுறைகளோடு இயக்க முடியும். இதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், நைஜீரியா, மாலத்தீவு, ஜப்பான், ஈராக், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, பஹ்ரைன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே இருதரப்பு விமான சேவை கட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்தியா, இலங்கை இடையே சிறப்பு விமான சேவை செய்ய உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அமைச்சக டிவிட்டரில், ‘இலங்கையுடன் ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளது. இதன் மூலம், சார்க் பிராந்தியத்தில் 6வது நாட்டுடனும், ஒட்டு மொத்தமாக 28 நாடுகளுடனும் இருதரப்பு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே அனைத்து தகுதி வாய்ந்த பயணிகளும் பயணத்தை மேற்கொள்ளலாம்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : India ,Sri Lanka ,Central Government , Airlines
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்