4 மாநில தேர்தல் முடிந்த நிலையில் நடவடிக்கை கொரோனா விதிமுறை மீறினால் பேரணிக்கு தடை விதிக்கப்படும்: தேர்தல் ஆணையம் திடீர் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை மீறினால் பேரணி ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் உட்பட 4 மாநில தேர்தல் முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் இன்னும் 4 கட்ட தேர்தல் எஞ்சியுள்ளது. இதுதவிர சில மாநிலங்களில் இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் பதிவு செய்த கட்சிகளின் தலைவர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

அதில், ‘தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களில் நட்சத்திர பேச்சாளர்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பது குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் மேடையில் மாஸ்க் கூட அணியாமல் பேசுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற செயல்கள் கொரோனா பரவ வழிவகுக்கும். எனவே, பிரசாரத்தில் ஈடுபடுவோர் கட்டாயம கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், அவ்வப்போது கைகளில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல் வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் பேரணியை ரத்து செய்ய ஆணையம் தயங்காது’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. தலைவர்கள் பங்கேற்ற பிரசார கூட்டங்களில் மக்கள் அதிகளவில் முகக்கவசம் கூட இன்றி பங்கேற்றனர். தற்போது, மேற்கு வங்கத்தில் மட்டுமே 4 கட்ட தேர்தல் மிச்சம் இருக்கிறது. இதுபோன்ற நிலையில், தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட எச்சரிககை விடுத்துள்ளதை சமூக ஆர்வலவர்கள் விமர்சித்துள்ளனர்.

Related Stories:

>