×

வருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6 மாதங்கள் கடந்த பின்பு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்: பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவு

சென்னை: வருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6 மாதங்கள் கடந்த பின்பு பத்திரம்பதிவு செய்து கொள்ளலாம் என்று பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து மண்டல டிஐஜி, டிஆர், சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மற்றும் வருமானவரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் வருமானவரி சட்டப்படி முடக்கப்படுகிறது. அவ்வாறு முடக்கப்படும சொத்துக்கள் தொடர்பாக வருமான வரித்துறை சார்பில் பதிவுத்துறைக்கு கடிதம் எழுதி அனுப்பபடுகிறது. அந்த கடிதத்தின் பேரில் 6 மாதங்களுக்கு அந்த சொத்துக்கள் மீது பத்திரப்பதிவு செய்யக்கூடாது. மேலும், இந்த சொத்துக்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காமல் முடியாமல் இருக்கும் பட்சத்தில் 2 ஆண்டுகள் வரை அந்த சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகளால் முடக்கி வைக்க அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை சார்பில் உரிய காரணங்கள் உடன் பதிவுத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும். அவ்வாறு கடிதம் எழுதினால் மட்டுமே அந்த சொத்துக்களை தொடர்ந்து பதிவு செய்யாமல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வருமான வரி சட்டம் சொல்கிறது. ஆனால், வருமான வரித்துறை சார்பில் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொத்துக்களை முடக்கி வைத்த நிலையில் அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகு அந்த துறையால் சொத்துக்கள் விடுவிக்கப்பட்டால் கூட பதிவுத்துறைக்கு உரிய கடிதம் அளிப்பதில்லை. இதனால், வருமானவரித்துறையால் முடக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த பின்பும் அந்த சொத்துக்களை பத்திரம் பதிவு செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் தான் உள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறைக்கு ஐஜிக்கு ஏராளமான புகார் வந்தது.

இந்த நிலையில் வருமானவரித்துறை சொத்துக்களை முடக்கி 6 மாதங்கள் கடந்த பின்பு, உரிய கடிதம் வராவிட்டால் பத்திரப்பதிவு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளலாம் என்று பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஐஜி சங்கர் மண்டல டிஐஜி, டிஆர், சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வருமான வரித்துறை முடக்கிய சொத்துக்களை 6 மாதங்கள் கடந்த பின்பு பதிவு செய்து கொள்ளலாம். சொத்துக்களை பதிவு செய்யும் அலுவலர் 6 மாதங்கள் கடந்து விட்டதா என்பதை மட்டும் ஆய்வு செய்து கொள்ள வேண்டும். மேலும், வருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6 மாதங்கள் ஆகாத நிலையில் பத்திரம் பதிவு செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த சுற்றிக்கை எந்த வித புகாருக்கும் ஆளாகாமல் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : IG , Registry
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...