×

எங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய உரிமை இருக்கிறது: இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்க்கப்பலான, ‘யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் (டிடிஜி 53),’ சமீபத்தில் லட்சத்தீவு கடல் வழியாக வந்து சென்றது. இதற்கு, இந்தியாவிடம் முறையான அனுமதியை பெறவில்லை. அமெரிக்காவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று கூறுகையில், ‘‘மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டல நீர்வழிப் பாதையில் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்களை பயன்படுத்தி எங்கள் போர்க்கப்பல் சென்று வந்தது. இதற்கு, இந்தியாவிடம் முன் அனுமதி கேட்க தேவையில்லை,’’ என்றார்.

அமெரிக்காவின் இந்த விளக்கத்துக்கு பதிலளித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ’ஐநா.வின் கடல் சட்ட ஒப்பந்தத்தின்படி இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. ஐநா.வின் சட்டப்படி, ஒரு நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் ராணுவ பயிற்சி, போர்க் கப்பல்களின் நடமாட்டம், அதிலும் குறிப்பாக ஆயுதங்கள் அல்லது வெடி மருந்துகள் பயன்படுத்துவதற்கு அந்த நாட்டின் முன் அனுமதி பெறப்பட வேண்டும், அனுமதி பெறாமல் எந்த நாட்டின் போர்க்கப்பல்களும் செல்ல முடியாது. பெர்சியன் வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணைப்பு வரை அமெரிக்க போர்க்கப்பல் அடிக்கடி சென்று வருவது, இந்தியாவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த இந்தியாவின் கவலை, அமெரிக்க அரசுக்கு தூதரக ரீதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

பிரத்யேக பொருளாதார மண்டலம் என்பது என்ன?

பிரத்யேக பொருளாதார மண்டலம்’ என்பது ஐநா.வின் கடல் சட்டத்தின்படி, கடற்கரையில் இருந்து அல்லது ஒரு நாட்டின் எல்லையில் 3 முதல் 12 கடல் மைல்களுக்கு அப்பால் இருந்து 200 கடல் மைல்கள் (370 கிமீ) வரை பரந்து விரிந்திருக்கும் கடல் பகுதியாகும். இந்த பகுதியில் நீர், காற்றிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்வது உள்ளிட்ட கடல் வளங்களை ஆராயவும், அவற்றை பயன்படுத்துவதற்கும் கடலோர நாடுகளுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த பகுதியில் அனைத்து நாடுகளும் கடல் வழி பயணம் செய்யலாம். அதன் விமானங்கள் சுதந்திரமாக அனுமதியின்றி பறக்கலாம்.

Tags : Lakshadweep ,US ,India , United States
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!