அரக்கோணம் அருகே இரட்டை கொலை: உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே இரட்டை கொலை வழக்கில் 4 நாள் போராட்டத்திற்கு பிறகு பேச்சுவார்தை முடிவில் உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி கவுதம்நகர் பகுதியில் கடந்த 7ம் தேதி இரவு இருபிரிவினர் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் சோகனூரை சேர்ந்த அர்ஜூன்(25), செம்பேட்டையை சேர்ந்த சூர்யா(27) ஆகியோரை பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த சிலர் குத்திக்கொலை செய்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து அதிமுக பிரமுகர் சத்யா(24), அஜித்(24), மதன்(37), சுரேந்தர்(19), நந்தா(20) கார்த்தி(20) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே போலீசார் நேற்று முன்தினம் இரவு பிரேத பரிசோதனை முடிந்து அர்ஜூன், சூர்யா ஆகியோரது சடலங்களை சோகனூர் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள், ‘‘பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடியும், அரசு வேலையும் வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதுவரை சடலங்களை வாங்க மாட்டோம்’’ என மறுப்பு தெரிவித்தனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், சடலங்களை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் சடலங்கள் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் 4வது நாளாக நேற்றும் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதைதொடர்ந்து நேற்று மாலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதற்கட்ட நிவாரண நிதியாக இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சத்திற்கான காசோலைகளையும், அரசு வேலை கிடைக்கும்வரை அவர்களது குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளையும் வழங்கினர். சிகிச்சைப்பெற்று வரும் 3 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தினர்களிடம் அதிகாரிகள் அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் அர்ஜூன், சூர்யா ஆகியோரின் சடலங்களை ஒப்படைத்தனர்.

Related Stories:

>