×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தும் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது

சென்னை: வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தும் சேமித்து வைக்க நடவடிக்கை இல்லாத நிலையில் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் 33 மாவட்டங்களில் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை காட்டிலும் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. இதனால், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்து இருந்தது. ஆனால், கடந்த ஜனவரியில் நிலத்தடி நீர் மட்டம் பல மாவட்டங்களில் குறைய தொடங்கியது. இதற்கு, வணிக நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்கவும் நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலேயே, கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு வேகமாக நிலத்தடி நீர் குறைய தொடங்கியது. இதனால், கடந்த மாதத்தில் மாநிலம் முழுவதும் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறையின் அங்கமாக மாநில நிலத்தடி நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.

இவ்வாறு கடந்த மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க ரூ.500 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நிலத்தடி நீர் தொடர்ந்து வணிக ரீதியாக உறிஞ்சுவதும் தடுக்கப்படாமல் இருப்பதும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதற்கு ஒரு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu , Groundwater
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...