கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயங்கரம்: பெட்ரோல் ஊற்றி எரித்து கள்ளக்காதலி படுகொலை

சென்னை: வேறு ஒருவருடன் கள்ளக்காதலி நெருக்கமாக இருந்ததால், ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து அவரை எரித்து படுகொலை செய்தார். எதிர்பாராதவிதமாக அவரும் உடல் கருகியதில் பலியானார். இது, சென்னை கோயம்பேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி (46). இவர், கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளார். இந்நிலையில், முதல் கணவரை பிரிந்த சாந்தி, ஸ்ரீராம் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, கடந்த நான்கு வருடங்களாக அவருடன் வசித்து வந்தார். வடபழனி மாநகர போக்குவரத்து பணிமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தவர் முத்து (48). இவர், அவ்வப்போது, கோயம்பேட்டுக்கு வரும்போது, சாந்தியுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில், இது கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து, நெருக்கமாக இருந்து வந்தனர். இந்நிலையில், ஸ்ரீராமுக்கும், சாந்திக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் முத்துக்கு தெரிந்தது. இதனால், ஆத்திரமடைந்த முத்து, ஸ்ரீராம், சாந்தியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக, நேற்று முன்தினம் இரவு ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்து, அங்குள்ள பாத்ரூமில் மறைத்து வைத்தார்.

நேற்று அதிகாலை ஸ்ரீராம், சாந்தி ஒன்றாக இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த முத்து, அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்றார். அந்த சமயத்தில், ஸ்ரீராம் கழிவறைக்கு சென்றுவிட்டார். எனவே, தனியாக இருந்த சாந்தியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். எதிர்பாராதவிதமாக முத்துவும் தீயில் கருகினார். உடல் முழுவதும் தீ பரவியதில், இருவரும் வலி தாளாமல் அலறி துடித்தனர். அலறல் சத்தம் கேட்டு, ஸ்ரீராம் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது ஸ்ரீராம், சாந்தி எனது மனைவி என்று கூறி அலறினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஸ்ரீராம் மீது சந்தேகமடைந்து அவரை அடித்து, உதைத்து கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவலறிந்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த சில ஆண்டுகளாக முத்துவுக்கும், சாந்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், சில மாதங்களாக ஸ்ரீராம் என்பவருடனும் சாந்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் சாந்தி நெருக்கமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் முத்துவுக்கு தெரியவந்தது. எனவே, கோபமடைந்த முத்து, இதுபற்றி சாந்தியிடம் கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்து நேற்று அதிகாலை சாந்தியை தீ வைத்து எரித்து கொலை செய்தபோது, அவரும் தீயில் கருகி பலியானது தெரியவந்தது. இதுதொடர்பாக, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>