×

ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய வண்ண மீன்கள் விற்பனை கூடமாக திகழும் கொளத்தூர் சந்தை

சென்னை: வீடுகளில் வண்ண மீன்களை வளர்ப்பது தற்போது பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. இந்த வண்ண மீன்கள் கடைகள் மற்றும் வார சந்தைகளில் அதிகளவில் கிடைக்கின்றன. அவ்வாறு இந்த மீன்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாக கொளத்தூர் விளங்குகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ண மீன்கள் சந்தையாக கொளத்தூர் உள்ளது. அந்த அளவிற்கு கொளத்தூருக்கும், வண்ணமீன்கள் விற்பனைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கொளத்தூர் கங்கா திரையரங்கம் அருகில் பாடசாலை தெரு மற்றும் தெற்கு மாடவீதி ஆகிய இரண்டு தெருக்கள் முழுவதும் வண்ண மீன்கள் விற்கும் இடமாகவும், மீன் வளர்ப்பிற்கு தேவையான பொருட்களை விற்கும் இடமாகவும் விளங்குகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை தற்ேபாது பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் இங்கு வளர்க்கப்பட்ட மீன்களை சென்ட்ரல் அருகே உள்ள மூர்மார்க்கெட் பகுதியில் கொண்டு சென்று விற்றுள்ளனர். பிறகு 1998ம் ஆண்டு முதல் கொளத்தூர் பகுதியிலேயே வண்ண மீன்களை விற்க தொடங்கியுள்ளனர். தற்போது குறிப்பிட்ட இந்த 2 தெருக்கள் மட்டுமல்லாது கொளத்தூர் பகுதியில் மேலும் சில இடங்களிலும் இந்த வண்ண மீன் விற்பனை களை கட்டியுள்ளது. இங்கிருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் வண்ண மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல்வேறு பகுதிகளிலிருந்து வண்ண மீன் வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக ஆர்டர் கொடுத்து விட்டு செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான வண்ண மீன்கள் இங்கிருந்து ரயில்கள் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த பகுதியில் 125 மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வண்ண மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வண்ண மீன்கள் விற்பனை செய்யப்பட்டாலும் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, தேவம்பேடு ஆகிய பகுதிகளில் மண் குட்டைகளில் இந்த மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் குட்டைகள் அமைக்கப்பட்டு, அதில் வண்ண மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

கொளத்தூர் பகுதியில் மட்டும் இந்த தொழிலை நம்பி 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளனர். ஒரு ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரையில் இங்கு மீன்கள் விற்கப்படுகின்றன. கோல்டு, ஷார்க், ஏஞ்சல், மாலிக், பைட்டர் உள்ளிட்ட மீன்களை பெரும்பாலும் பொதுமக்கள் வீடுகளில் வாங்கி வளர்த்து வருகின்றனர். இவற்றில் ஏஞ்சல் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மீன்களை வெயில் காலங்களில் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இல்லையென்றால் அதிக வெப்பம் காரணமாக இறந்துவிடும்.

மீன்கள் அவற்றின் வகைக்கு ஏற்றாற்போல் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. குறிப்பாக, அரோனா போன்ற வாஸ்து மீன்கள் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பொய்காப் போன்ற இவ்வகை மீன்கள் 20 ஆண்டு காலம் வரை உயிர் வாழ்கின்றன. இந்த வகை மீன்கள் தாய்லாந்து நாட்டில் பிரசித்தி பெற்றவை. வீடுகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு கடைகளில் இருந்து உணவு பொருட்கள் வாங்கி போடப்படுகின்றன. ஆனால், பண்ணைகளில் வளர்க்கப்படும் போது பூச்சிகளை பிடித்து மீன்களுக்கு உணவாக போடுகின்றனர். இந்த பூச்சி வகைகளை பிடிப்பதற்காக கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் காலை 3 மணி முதல் 6 மணி வரை ஈடுபடுகின்றனர்.

ஏனென்றால், சூரிய ஒளி பட்டால் அந்த பூச்சிகளை பிடிக்க முடியாது என்பதால் இந்த நேரத்தில் சென்று பிடிக்கின்றனர். அவ்வாறு பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்கள் 30 நாட்களில் இருந்து 50 நாட்களுக்குள் வளர்ந்து சந்தைக்கு விற்பனைக்கு வந்துவிடும். பெரும்பாலான வண்ண மீன் சார்ந்த பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மீன் தொட்டியில் பயன்படுத்தப்படும் அழகு சாதனங்கள் மற்றும் மீன் சுவாசிப்பதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் உள்ளிட்ட பல உதிரிபாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. வீடுகளில் பெரும்பாலும் பொதுமக்கள் கண்ணுக்கு அழகாக உள்ளது என்று பல வகை மீன்களையும் ஒன்றாக சேர்த்து வளர்க்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட வகை மீன்களை சேர்த்து வளர்க்கக் கூடாது. அப்படி வளர்த்தால் அந்த மீன்கள் இறந்து விடும், என்று மீன் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோல்டு, ஷார்க், ஏஞ்சல், மாலிக் உள்ளிட்ட மீன் வகைகளை சிச்சிலெட் வகையான மீன்களோடு ஒன்றுசேர்த்து வளர்க்கக்கடாது. இவ்வாறு மீன் வளர்ப்பதில் பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது. இதுகுறித்து வண்ண மீன்கள் சந்தையின சங்க தலைவர் ராஜராஜன் கூறியதாவது:

வண்ண மீன்கள் வளர்ப்பதில் பல்வேறு நெறிமுறைகள் உள்ளன. பொதுவாக புதிதாக மீன் வாங்க வரும் நபர்கள் கண்களுக்கு அழகாக உள்ளது என்று எண்ணி கண்களில் பட்ட மீன்களை எல்லாம் வாங்கி சென்று விடுவார்கள். அதன் பிறகு வண்ண மீன்கள் இறந்து விட்டது எனக் கூறி எங்களிடம் வந்து சொல்வார்கள். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஒரு புரிதல் வரும். மீன்களுக்கு எவ்வளவு உணவு போட வேண்டும், எந்த வகையான மீன்களை வளர்க்க வேண்டும், குறிப்பாக மீன்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட கூடாது உள்ளிட்ட பலவற்றையும் நாங்கள் சொல்லி தெளிவுபடுத்துவோம்.

தற்போது மீன்களுக்கு அதிகாலையில் எழுந்து பூச்சிகளை பிடித்து உணவாக மீன் பண்ணைகளில் வழங்கி வருகின்றனர். அவர்கள் அதை பிடிப்பதற்கு பெரும்பாடாக உள்ளது. காலை 3 மணிக்கே சென்று சாக்கடையில் இறங்கி பூச்சிகளை பிடிக்க வேண்டிய சூழல் உள்ளது. இவற்றை தவிர்க்க கரும்புகளில் இருந்து வரும் டாப்மியா என்னும் பொருளை பயன்படுத்துவதால் மீன்கள் வேகமாக வளரும். ஆனால், இந்த டாப்மியா பொருளை அரசு வெளிச்சந்தையில் விற்க தடை விதித்துள்ளது. ஏனென்றால் இந்த பொருளிலிருந்து தான் அனைத்து வகை மதுபானங்களும் தயாரிக்கப்படுகின்றன ஒரு குறிப்பிட்ட சதவீதம் இந்த பொருளை மீன் வளர்ச்சிக்கு கொடுத்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த வகையான பொருள் மீன்களுக்கு தாய்ப்பால் போன்றது. ஒரு மீன் பிறந்து அடுத்த 15 நாட்களுக்கு இந்த உணவுப் பொருளை அளித்தால் அது நன்றாக வேகமாக வளரும்.

தற்போது தாய்லாந்தில் உள்ள அளவிற்கு நமது நாட்டில் வண்ண மீன்கள் வளர்ப்பதில் தொழில்நுட்ப பற்றாக்குறை உள்ளது. இதனால், ஏற்றுமதி பாதிக்கிறது. இதனை சரிசெய்ய வண்ணமீன் பூங்கா அமைக்க வேண்டும். மேலும் உழவர் சந்தை போல், கொளத்தூர் பகுதியில் நவீன வசதிகளுடன் வண்ண மீன் சந்தை அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் சிறிய வியாபாரிகளும் பிழைக்க முடியும். மேலும், எங்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் குறிப்பாக கொளத்தூர் பகுதியில் வண்ண மீன்களுக்கு என்று ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் மீன்கள் வளர்ப்பது பற்றிய ஒரு தெளிவு வியாபாரிகளுக்கு வரும். இதன்மூலம் தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை அவர்களால் ஈடுகட்ட முடியும்,’ என்றார்.

கண்களுக்கு விருந்தாகவும் மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இந்த வண்ண மீன்கள் வளர்ப்பில் ஆசியாவிலேயே கொளத்தூர் பகுதி சிறந்து விளங்குகிறது என்றால் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.

தினசரி வருவாய் ரூ.30 லட்சம்

கொளத்தூர் பகுதியிலிருந்து மட்டும் ஒரு நாளைக்கு 3000 மீன் பெட்டிகள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் வரை வண்ண மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கொளத்தூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் வண்ண மீன்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. கடல்வாழ் உயிரினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் வண்ண மீன்கள் வளர்ப்பதற்கு மானியம் தரப்படுகின்றன.

புலோரான், ரெட் பேரட்டுக்கு வரவேற்பு

வெளிநாடுகளில் 2000 வகையான மீன்கள் இருந்தாலும் இந்தியாவில் 500 வகையான வண்ண மீன்கள் கிடைக்கின்றன. இதில் கொளத்தூர் பகுதியில் மட்டும் 300 வகையான மீன்கள் கிடைக்கின்றன. சிச்சிலேட் வகையிலான மீன் வகையில் 250 வகையான மீன்களும், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதியிலிருந்து சில மீன்களும் இங்கு கொண்டுவந்து விற்கப்படுகின்றன. அதில் புலோரான் மற்றும் ரெட் பேரட் உள்ளிட்ட மீன்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வகையான மீன்களை வீட்டில் வளர்க்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரளாவிலிருந்து வரும் டெனிசோனிக் என்னும் மீன் இனமும் மக்களால் அதிகளவில் வாங்கப்படுகிறது. இந்த மீன் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Tags : Kolathur Market ,Asia , Sale of fish
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…