தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் கடும் பின்னடைவு: செங்கோட்டையன், கருப்பணனுக்கு எடப்பாடி பழனிசாமி டோஸ்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செம டோஸ் விட்டாராம். ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவில் முக்கிய தலைவர்களாக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் இருந்தனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 3 பேரும் வெற்றி பெற்றனர். அதில் கருப்பணனுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதுவும் தோப்பு வெங்கடாச்சலம் வகித்த சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துறை பதவி வழங்கப்பட்டது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் கருப்பணனும், தோப்பு வெங்கடாச்சலமும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தனர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் அவர் ராஜினாமா செய்ததும் எடப்பாடி முதல்வரானார். அப்போது சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட செங்கோட்டையன், கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின்னர் செங்கோட்டையனும், கருப்பணனும் ஒன்று சேர்ந்தனர். தோப்பு வெங்கடாச்சலத்துக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர். இந்நிலையில், கட்சியின் மேல்மட்டத்துடன் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு மோதல் ஏற்பட்டது. இதற்கு செங்கோட்டையன்தான் மூல காரணம் என்று கூறப்பட்டது. இந்த கோபத்தில், ஜெயலலிதா பேரவை மாநில நிர்வாகி பதவியை தோப்பு வெங்கடாச்சலம் ராஜினாமா செய்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாச்சலத்துக்கு சீட் வழங்கப்படவில்லை. சீட் கொடுக்காவிட்டால், கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிடுவார் என்று நினைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் திடீரென்று சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால் அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்து செங்ேகாட்டையனும், கருப்பணனும் பாதி நாட்கள் பெருந்துறை தொகுதிக்கு வந்து அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்காக பிரசாரம் செய்தனர். கடந்த 6ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் படுதோல்வியை சந்திக்க உள்ளதாகவும், டெபாசிட் கிடைப்பதே கடினம் என்றும் உளவுத்துறை முதல்வருக்கு அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோரை அழைத்துப் பேசியுள்ளார். அப்போது உங்களால் தேவையில்லாமல் பெருந்துறை தொகுதி இழந்து விட்டோம். உங்கள் பேச்சைக் கேட்டதால் ஒரு தொகுதி போய் விட்டது. இந்த தொகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் மாவட்டம் முழுவதும் எதிரொலித்துள்ளது. இதனால், பலர் வெற்றிபெறுவது கடினமாகிவிட்டது. அதற்கு, நீங்கள் இருவரும்தான் காரணம் என்று டோஸ் விட்டுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி ஈரோடு மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>