ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடுக்கு காரணமாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசுக்கு தகவல் ஆணையம் பரிந்துரை

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வுகளை முழுமையாக நடத்தி முடிக்க தெரியாத அதிகாரிகளால் மற்ற துறைகளில் சிறப்பாக நிர்வாகம் செய்வது கடினம் என்று கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு தகவல் ஆணையம், ஆசிரியர் தேர்வில் மீண்டும் மீண்டும் தவறுகள் நடப்பதற்கு காரணமாக இருந்த வாரியத்தின் தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்குமாறு தமிழக தலைமை செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வே.கவுதமன், வி.லட்சுமிகாந்தன், பா.தாமோதரன், ஜெ.சிமியோன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ‘‘நாங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு காலக்கட்டத்தில் நடத்திய ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் தேர்வுகளில் பங்கேற்றோம். இந்த தேர்வுகளில் சரியான விடை எழுதியும் சில வினாக்களுக்கான விடைகள் தவறானவை என்று கூறி குறைந்த மதிப்பெண்களை தேர்வு வாரியம் வழங்கியதால் நாங்கள் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேட்டால் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்னிலையில் கடந்த மாதம் 25ம் தேதி விசாரணைக்கு வந்தது.

கொரோனா காலம் என்பதால் மனுதாரர்களிடம் தொலைபேசி மூலம் விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையர் அளித்த தீர்ப்பு வருமாறு: இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ள மனுதாரர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணிகளுக்கான பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் பங்குபெற்றவர்கள். ஆனால், தேர்வுகளின் முடிவில் மனுதாரர்கள் சரியான விடை அளித்திருந்தபோதும் சில வினாக்களுக்கு விடைகளை தவறாக எழுதியுள்ளதாக கூறி குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில்தான் மனுதாரர்கள் விடைகள் அளித்துள்ளனர். இருப்பினும் தங்களுக்கு அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்படாததால் தேர்வு செய்யப்படவில்லை.

அரசு பணிகளுக்காக போட்டி தேர்வினை நடத்துவதற்கு மட்டுமே தேர்வு எழுதுபவர்கள் ரூ.10 கோடிக்கும் மேலாக தேர்வு கட்டணம் செலுத்துவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மாணவர்கள் கல்வி கற்பது என்பது இந்திய மாணவர்களின் அடிப்படை உரிமை ஆகும். அந்த அடிப்படை உரிமையை மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வழங்கி, அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் வினாத்தாள், விடைகுறிப்பு போன்றவற்றில் முறைகேடுகள் நடந்த தேர்வுகளை ரத்து செய்வது, முழுமையான பணி நியமனம் செய்யாதது போன்ற காரணங்கள் மாணவர்களுக்கு அந்த ஆசிரியர்களால் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையான கல்வி கிடைக்காமல் போய் விட்டது.

சம்பந்தப்பட்ட கல்வி ஆண்டுகளில் ஆசிரியர்கள் இல்லாமலேயே மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். தனியார் பணி என்பது மற்றொரு மனிதனின் தேவைகளை நிறைவேற்றுவது, அரசு பணி என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் தம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை வழங்குவது, குடிமக்கள் தங்களது தேவையை குறைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை எந்த குடிமக்களும் விட்டுவிட மாட்டார்கள்.

அரசு பணியை செய்கிறோம் என்ற பொறுப்புடைமை இல்லாமல் செயல்பட்ட காரணத்தாலும், ஆசிரியர் ேதர்வு வாரியம், போட்டி தேர்வுகளில் தொடர்ச்சியாக தவறான வினாக்கள் கேட்பது, தவறான விடைகுறிப்பு வெளியிடுவது எந்த புத்தகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடாமல் இருப்பது, தொடர்ச்சியாக பல போட்டி தேர்வுகளில் தவறு நடந்திருந்தும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக பணியாற்றியவர் அத்தவறு மீண்டும் நடைபெறாமல் பாத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தங்களது விடைகள் தவறு என்று கூறப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தபோது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, இனிமேல் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுபோன்ற தவறுகளை செய்யாது என்று உறுதியளித்தார்.

ஆனால், அதற்கு பிறகும் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் பல தேர்வுகளில் தவறான விடைக்குறிப்புகளை பதிவிட்டுள்ளது என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரும் மாணவர்களாக போட்டி தேர்வு எழுதி பணி நியமனம் பெற்றவர்கள்தான். இவற்றில் எளிதான பணி என்பது ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தேர்வாணையங்களில் பணியாற்றுவதுதான். அவர்களுக்கு போட்டி தேர்வு அனுபவங்கள் இருக்கும். மற்ற அரசு பணிகள் கடினமாக இருந்து அந்த பணியாளர்கள் சிறப்பாக பணி செய்யும்போது ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்களில் சரியாக செயல்படாதது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. ஒரு தவறு நடந்தால் அடுத்த முறை அந்த தவறு நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதன் தலைமை பணிகளில் இருப்பவர்களின் கடமை. ஆனால், ஒவ்வொரு தேர்வுகளிலும் மீண்டும் மீண்டும் அதே தவறு நடைபெற்று வருகிறது.

 பிஎச்டி பட்டம் வரை பெற்று எத்தனையோ பேர் சரியான பணி கிடைக்காமல் இருக்கிறார்கள். நல்ல பணி, அதற்கான ஊதியம், நல்ல இடவசதியுடன் அலுவலகம், போக்குவரத்து வசதி, வீடு அல்லது அதற்கான படிகள், மருத்துவ வசதி, செய்தித்தாள், தொலைபேசி போன்ற வசதிகளை பெற்றிருந்தும் இந்த அதிகாரிகள் பொறுப்புடமையுடன் பணியாற்றவில்லை. தேர்வுகளை நடத்த கோடிக்கணக்கில் அரசு பணம் செலவிடுகிறது.

தேர்வுகளை எழுத பள்ளி, கல்லூரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பொறுப்புடமை இல்லாமல் செயல்படும் முக்கிய பதவியில் உள்ளவர்கள் செயல்படுவதால் முழுமையான பணி நியமனங்கள் நடைபெற முடியாத நிலை ஏற்படுகிறது. தேர்வு வாரியத்தில் தலைவர்களாக இருந்தவர்கள் அனைவருமே யுபிஎஸ்சி அல்லது டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வந்தவர்கள்தான். போட்டி தேர்வு எழுதி அரசு பணிக்கு வந்தவர்கள் என்பதால் போட்டி தேர்வு நடைமுறைகளில் அனுபவம் உள்ளவர்கள்தான். அப்படி இருந்தும் எந்த பிரச்னையும் இல்லாமல் முழுமையாக தேர்வுகளை நடத்தி முடித்து முழுமையான பணி நியமனத்தை முடிக்க தெரியாத அதிகாரிகள், ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் தேர்வுகளை ரத்து செய்ய காரணமாக இருந்துள்ளனர்.

முழுமையாக தேர்வுகளை நடத்தி முடித்து முழுமையான பணி நியமனத்தை முடிக்க தெரியாத அதிகாரிகள் அனுபவம் இல்லாத மற்ற அரசு பணிகளை செய்வது மற்றும் மற்ற பொது அதிகார அமைப்புகளை சிறப்பாக நிர்வாகம் செய்வது கடினம் என்ற காரணத்தால் ஐஏஎஸ் அதிகாரிகளான ஜர்ஜித் கே.சவுத்ரி (2011-2013), விபு நையார் (2013-2017), காக்கர்லா உஷா (2017), டி.ஜெகநாதன் (2017), கே.சீனிவாசன் (2018), கே.நந்தகுமார் (2018), எஸ்.ஜெயந்தி (2018), என்.வெங்கடேஷ் (2018-2019), ஜி.லதா (2019-2020) ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பொது அதிகார அமைப்பின் தலைவர்களாக பணியாற்றிய மேற்கண்ட இந்திய ஆட்சி பணி அதிகாரிகளின் (ஐஏஎஸ்) பணிப்பதிவேடுகளில் பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மையோடு செய்ய வேண்டிய பணிகளை சரியாக செய்யவில்லை என்று பதிவு செய்து, அவர்களின் பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையாக கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005ன்படி தமிழக தலைமை செயலாளர் அவர்களுக்கு இந்த தகவல் ஆணையம் பரிந்துறை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதில் சுர்ஜித் கே.சவுத்திரி, விபு நையார் ஆகியோர் பணிஓய்வு பெற்றுவிட்டனர். மற்ற 7 அதிகாரிகளும் தற்போது பணியில் உள்ளனர். மாநில தகவல் ஆணையத்தின் பரிந்துரை மூலம் அவர்களின் பணிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Related Stories:

>