அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரக்கோணம் இரட்டை படுகொலையை கண்டித்து, சென்னையில் நேற்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணத்தில் நடந்த இரட்டை படுகொலையை கண்டித்து விசிகவினர் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு இரட்டை படுகொலையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, திருமாவளவன் பேசியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கோணம் சோகனூரை சேர்ந்த அர்ஜூனன், செம்பேடு சூர்யா ஆகிய இருவரையும் அதிமுக, பாமகவை சார்ந்த சாதி வெறியர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளார்கள். இது எதேச்சையாக நடந்தது இல்லை. திட்டமிட்டு ஆட்களை திரட்டி ரவுடிகளை கொண்டு இருவரையும் கொடூரமாக படுகொலை செய்துள்ளார்கள். இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது.   

தேர்தலில் அதிமுக, பாமக, பாஜ கூட்டணி படுதோல்வியை சந்திக்க இருக்கிறது. அதனால், ஏற்பட்ட விரக்தியின் விளைவாக வன்முறைகளில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பிரசாரத்தின்போதும் சாதி வெறியாட்டத்தை தூண்ட முயற்சித்தார்கள். அரியலூர், கிருஷ்ணகிரி, வானூர், திருப்போரூர் போன்ற இடங்களில் விசிகவினரை தாக்கியுள்ளனர். பல இடங்களில் அதிமுக, பாமகவினர் கூட்டு சேர்ந்து சாதிவெறியை தூண்ட முயற்சி செய்தார்கள். அரக்கோணம் தொகுதியில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். தலித் என்பதாலேயே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பச்சை படுகொலை இது. காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 பேர் அடையாளம் தெரிந்த நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில்தான் மிகவும் மோசமாக சாதிய வன்முறை அதிகரித்து வருகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். சாதிய வன்கொடுமைகளை தடுக்க தற்போது இருக்கும் சட்டங்களே போதுமானது. புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை, என்றார்.

Related Stories:

>