கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை எழும்பூர் நரியங்காடு  காவலர் குடியிருப்பில் சுகாதாரத்துறையுடன் இணைந்து கொரோனா  தடுப்பு விழிப்புணர்வு மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் முகாமை துவக்கி வைத்தார். அப்போது போலீஸ் உயர்அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பின்னர், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலையை சமாளிப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஆயுதம் கோவேக்‌சின் தான். இந்தியாவில் தற்போது இருக்கும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் காவலர் குடியிருப்பில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னையில் இதுவரை 6 ஆயிரம் ேபாலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். இதை 100 சதவீதம் உயர்த்தும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். இதுவரை சென்னை நகரில் மட்டும் 3,315 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொரோனாவால் பாதித்துள்ளனர். தற்போது 87 காவல் அதிகாரிகள், காவலர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிலர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். சிலர் மருத்துவமனையில் இருக்கின்றனர்.  இந்த கொரோனா பரவலை தடுப்பதற்கு சென்னை நகர காவல் சார்பில் லோக்கல் மார்க்கெட் பகுதிகளில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க முடியும், சமூக இடைவெளியை எப்படி கடைபிடிப்பது போன்ற முயற்சிகளை எடுத்து வருகிறோம். விழிப்புணர்வு கொண்டு வருவதற்கு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவலர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறோம். முக்கியமாக போக்குவரத்து சிக்னல், மக்கள் வசிப்பிடம் மற்றும் குடிசை பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>