ஆம்னி பேருந்துகள், ஷேர் ஆட்டோ ஆக்கிரமிப்பால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்

தாம்பரம்: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பொதுமக்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரிகள், வேலைகளுக்கு செல்ல தாம்பரம் வந்து, அங்கிருந்து பேருந்து மற்றும் ரயில்கள் மூலம்  தினமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் தாம்பரம் பகுதி 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இங்குள்ள ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆட்டோக்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளை சாலையில் பாதி தூரத்திற்கு நிறுத்தி விடுகின்றனர். அதேபோல, தாம்பரம் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால பகுதி முழுவதும் ஒருபுறம் ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் மற்ற வாகனங்கள் செல்லமுடியாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட தூரத்துக்கு ஆட்டோக்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அணிவகுத்து நிற்பதால், அவ்வழியாக வரும் மாநகர பேருந்துகளை ஜிஎஸ்டி சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால், பின்னல் வரும் இதர வாகன ஓட்டிகள்  பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆட்டோக்கள் மற்றும்  ஆம்னி பேருந்துகள் சாலையில் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தாம்பரம் போக்குவரத்து போலீசாரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும், ஆட்டோக்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு மாதம்தோறும் பெரும்தொகை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தினசரி நெரிசலில் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘புறநகர் பகுதி மக்கள் லட்சக்கணக்கானோர் பல்வேறு தேவைகளுக்கு தினசரி தாம்பரம் வந்து செல்கின்றனர். ஆனால், அங்கு போக்குவரத்து போலீசார் முறையாக பணிகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், ஆட்டோக்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதாலும் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, போக்குவரத்து உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தால், அவர்களும் காதில் வாங்காதபடி உள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் இருபுறமும், தாம்பரம் மேம்பாலத்திலும் ஆட்டோக்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதை தடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>