×

உர விலை உயர்வு: காங்கிரஸ் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் விரோத சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த நான்கு மாதங்களாக நெடுஞ்சாலைகளில் அமர்ந்து தொடர் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி தயாராக இல்லை. இந்நிலையில், மத்திய அரசு டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால் உரங்களின் விலை மூட்டைக்கு ரூ.700 வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.1200க்கு விற்ற டி.ஏ.பி., 50 கிலோ உரம் தற்போது ரூ.1900 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, ரூ.900க்கு விற்ற காம்ப்ளக்ஸ் உரங்கள் 20:20 ரூ.1,350, ரூ.1,175க்கு விற்ற 10:26:26 உரம் ரூ.1,775, ரூ.900க்கு விற்ற 15:15:15 உரம் ரூ.1,500, ரூ.1,200க்கு விற்ற 12:32:16 உரம் ரூ.1800 என விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து விவசாய தொழிலையே விட்டு வெளியேறுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தின் காரணமாக அனைத்து உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சந்தை என்பது இன்றைக்கு அம்பானி, அதானி கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சில கார்ப்பரேட் தொழிலதிபர்களின் ஆதாயத்திற்குதான் வேளாண் சட்டங்களே கொண்டு வரப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிற பிரதமர் மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக, உரங்களின் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Congress , Fertilizer price hike: Congress condemns
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்