×

மற்ற மாநிலங்களைபோல கொரோனாவுக்கான பரிசோதனை கட்டணத்தை ரூ.400 வரை குறைக்க வேண்டும்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது: தேவைப்படுவோர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். அறிவியலுக்கு எதிராகவும் தடுப்பூசிகளுக்கு எதிராகவும் தவறான கருத்துகளை மக்களிடம் பரப்புபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவிகளின்  அடக்க விலை ரூ.200 அளவிற்கு குறைந்துவிட்ட நிலையில், பரிசோதனைக்கான கட்டணம் ரூ.1500  வரை தமிழகத்தில் உள்ளது. அதை பிற மாநிலங்களைப் போல ரூ.400 வரை குறைக்க வேண்டும்.

கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து உயிரையும் துச்சமெனக் கருதி, கடுமையாக பணியாற்றி வரும் மருத்துவத் துறை பணியாளர்கள்  அதிக உடல் மற்றும் உள ரீதியான சோர்வுகளுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களது தன்னலமற்ற உழைப்பை மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்கவில்லை. அவர்களது நியாயமான  நீண்ட காலக்  கோரிக்கைகள் கூட  நிறைவேற்றப்படவில்லை. எனவே, உடனடியாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்பநர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர்கள் அனைவரின் பணியையும் நிரந்தரப்படுத்த வேண்டும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட  நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

கொரோனா கால அரசின் வாக்குறுதிகளான ஒரு மாத சிறப்பு ஊதியம், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவி, இறப்பு ஏற்படின் ரூ.50 லட்சம் குடும்ப நிதி உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி  போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும்.  முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கும் இவற்றை வழங்க வேண்டும். கூடுதல் மருத்துவர்களையும், செவிலியர்களையும் உடனடியாக தமிழக அரசே நேரடியாக நியமிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கக் கூடாது. உயர் சிறப்பு மருத்துவக் கல்வி பயிலும் மருத்துவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். அது அத்துறைகளின் சேவையை பாதிக்கிறது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.காளிதாஸ், மாநில துணைத் தலைவர் எஸ்.தனவந்தன் உடனிருந்தனர்.

Tags : Doctors Association for Social Equality , Doctors' Association for Social Equality demands reduction of corona examination fee to Rs 400 as in other states
× RELATED டாக்டர்களுக்கு பல மணிநேரம் தொடர் பணி...