கூடலூர், பந்தலூர் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: தேயிலை தோட்ட வேலைக்கு செல்ல மறுத்து தொழிலாளர்கள் போராட்டம்

கூடலூர்: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுவதை கண்டித்து அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் தேவாலா அட்டி பகுதியை ஒட்டிய பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் சரகம் 4 பகுதியில் உள்ள குடியிருப்புகளில்  வசிக்கும் தர்மலிங்கம் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளை கடந்த 8ம் தேதி இரவு  இரண்டு காட்டு யானைகள் சேதப்படுத்தின. அப்போது வீடுகளில் இருந்தவர்கள் பின்புற வாசல் வழியாக  அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர்.

நேற்று முன்தினம் இரவும் அதே பகுதிக்கு வந்த  காட்டு யானைகள் மீண்டும் அதே வீடுகளின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. தொழிலாளர்  குடியிருப்பு பகுதிக்குள் அடுத்தடுத்து 2 நாட்கள் யானைகள் புகுந்து, வீடுகளின் கதவு, ஜன்னல்களை உடைத்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என கூறி தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர், எல்.பி.எப். தொழிற்சங்க நிர்வாகி மாடசாமி மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த யானைகள் மீண்டும் தங்கள் பகுதிக்கு வராமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வேலைக்குச் செல்லப் போவதில்லை என தெரிவித்த தொழிலாளர்கள், இரவில் வரும் காட்டு யானைகளால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும், வீடுகளுக்குள் குடும்பத்துடன் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். டேன்டீ நிர்வாகமும், வனத்துறையும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்  கோரிக்கை விடுத்தனர். யானை நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் வனப் பணியாளர்களை நியமித்து உள்ளதாகவும், முதுமலையில் இருந்து இரண்டு கும்கிகளை வரவழைத்து காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர்.

Related Stories:

>