மம்தாவின் அரசியல் வன்முறைகளே பிரச்சனைகளுக்கு காரணம்: சித்தல்குச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடவடிக்கை தேவை...பிரதமர் மோடி வலியுறுத்தல்.!!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கடும் நடவடிக்கை தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க 4ம் கட்ட தேர்தல்:

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, கடந்த மார்ச் 27ம் தேதி முதல் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 1ம் தேதி 30  தொகுதிகளுக்கும்,  6ம் தேதி 31 தொகுதிகளுக்கும் முறையே 2வது, 3வது கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது.

இதனை தொடர்ந்து, இன்று 4வது கட்டமாக ஹவுரா, ஹூக்ளி, கூச் பெஹர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளும் பதற்றமானவை என கண்டறியப்பட்டதால்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கூச் பெஹர் மாவட்டத்தில் உள்ள சிதால்குர்ச்சி சட்டமன்ற தொகுதியில் முதல்முறை வாக்காளரான ஆனந்த் பர்மா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டதால் வன்முறை வெடித்தது. இந்த பயங்கர மோதலை அடுத்து வன்முறையாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மானபங்கா என்ற இடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து இன்றைய தேர்தல் வன்முறையில்  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

மம்தா குற்றச்சாட்டு:

இதற்கிடையே, சித்தல்குச்சியில் மத்திய படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான சம்பவத்துக்கு அமித்ஷாவின் சதியே காரணம் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி  குற்றம்சாட்டியுள்ளார். கூச் பெகார் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். வாக்காளர் மீது மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதால் அமித்ஷா பதவி விலக வேண்டும்.  வாக்காளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மத்திய படையினருக்கு எப்படி தைரியம் வந்தது? என்று கேள்வி எழுப்பிய மம்தா, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உயர் நிலை விசாரணை செய்யப்படும் என்றார்.

மத்தியப் படைகள் உள்துறை அமைச்சரின் உத்தரவின் கீழ் செயல்படுவதால் நான் அவர்களைக் குறை கூறவில்லை. நான் நம்புகிறேன், இந்த சம்பவம் (கூச் பெஹாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம்) முன் திட்டமிடப்பட்டதாகும். இது குறித்து  விசாரணைக்கு உத்தரவிடுவேன் என்றார்.

பிரதமர் மோடி வலியுறுத்தல்:

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கூச் பெகாரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். தேர்தலின்போது  நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கடும் நடவடிக்கை தேவை வலியுறுத்தியுள்ளார். கூச் பெகார் மாவட்டம் சித்தல்குச்சியில் வாக்குச்சாவடி அருகே 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அளிக்கிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து  தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படையினர் மீது பிரச்சனை ஏதும் இல்லை. மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வன்முறைகளே பிரச்சனைகளுக்கு காரணம் என்றார். தேர்தலில் வெற்றி பெற  வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மமதா பானர்ஜி வன்முறையை ஏவி விடுவதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, வன்முறையை கையில் எடுப்பதன் மூலம், பாதுகாப்பு பெற முடியாது என்பதை மமதா பானர்ஜி உணர வேண்டும் என்றும்  பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories:

>