×

காந்தி மார்க்கெட்டை மீண்டும் மூட ஆலோசனை சில்லறை விற்பனை தடைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

திருச்சி : திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கடைகளை மூட வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் ஒத்துழைக்காவிட்டால் காந்தி மார்க்கெட்டை மீண்டும் மூட மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக வெளியான தகவலால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணா விளையாட்டரங்கம், ஜோசப் கல்லூரி, எஸ்ஐடி கல்லூரி வளாகம், மதுரம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தைகள் செயல்பட்டன.

இந்நிலையில் காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடி காய்கனி வணிக வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக திருச்சியை சேர்ந்தவர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் காந்தி மார்க்கெட் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதனால் ஏற்கனவே மூடப்பட்டிருந்த காந்தி மார்க்கெட் ஊரடங்கு தளர்வுக்கு பின்னரும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 26-11-2020ல் மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இடைக்கால தடையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து 8 மாதங்களுக்கு பின் காந்தி மார்க்கெட் கடந்த நவ.27ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா 2வது அலை பரவி வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர் கமலக்கண்ணன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் 27 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உதவி ஆணையர் கமலக்கண்ணன் பேசுகையில், ‘கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அரசு காந்தி மார்க்கெட்டை மூடும்படி தெரிவித்துள்ளது. சில்லரை வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட உள்ளது. சில்லரை வியாபாரத்துக்காக மக்கள் அதிகளவு வருவதால்தான் கொரோனா பரவுவதாக எங்களுக்கு புகார்கள் வரப்பெற்றுள்ளன. சில்லரை வியாபாரத்தை நிறுத்துவது தொடர்பாக வியாபாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்’ என்றார்.

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் பேசுகையில், ‘கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி மூடிய காந்தி மார்க்கெட் 8 மாதங்களுக்கு பின் நவ.26ம் ேததி திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 2 மாதங்களாகத்தான் வியாபாரம் ஓரளவுக்கு நடந்து, துவண்டு ேபான வியாபாரிகள் வாழ்வில் நம்பிக்கை துளிர்விட துவங்கி உள்ளது.

இந்நிலையில் மீண்டும் காந்தி மார்க்கெட்டை மூடினால் வியாபாரிகள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். கடந்த நவம்பர் மாதம் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 5 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை சில்லறை வியாபாரம் நடத்திக்கொள்வது என்ற கட்டுப்பாடுகளுடன் காந்தி மார்க்கெட் திறக்கப்பட்டது. காந்தி மார்க்கெட்டை மூடுவதற்கு பதில் அதேபோன்ற நடைமுறை தொடரலாம். நேரக்கட்டுப்பாடு, சமூக இடைவெளியுடன் கடைகள் அமைக்கலாம். இத்தனை நாட்களாக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்தபோது காட்டாத கெடுபிடிகளை தற்போது வியாபாரிகளிடமும், பொதுமக்களிடம் காட்டுவது நல்லதல்ல. இது நிச்சயம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு கூறுகையில், ‘காந்தி மார்க்கெட்டை மூடுவதற்கு பதில் நேரக்கட்டுப்பாடு விதிக்கலாம். ஒருவேளை மூடும் சூழல் ஏற்பட்டால் எங்களுக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும். இல்லையெனில் வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கும் சூழல் ஏற்படும்’என்றார்.

கூட்ட முடிவில் உதவி ஆணையர் கமலக்கண்ணன் கூறுகையில், ‘கருத்துக்கேட்புக் கூட்டம் மட்டுமே தற்போது நடத்தப்பட்டுள்ளது. உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் கலெக்டருக்கு தெரியப்படுத்தப்படும். இன்று (நேற்று) மாலை கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார். மேலும் வியாபாரிகள் ஒத்துழைக்காதபட்சத்தில் காந்தி மார்க்கெட்டை மீண்டும் மூட மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக வெளியான தகவலால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை முதல்

காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டும் பொன்மலை ஜி.கார்னரில் சில்லறை விற்பனை

காந்தி மார்க்கெட் தொடர்பாக திருச்சி கலெக்டர் திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் மாலையில் நடந்த கூட்டத்தில் மாநகர துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், டிஆர்ஓ பழனிகுமார் மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (11ம் தேதி) முதல் காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபார கடைகள் மட்டும் இயங்கும்.

மேலும் சில்லறை வியாபார காய்கறி கடைகள் அனைத்தும் பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் செயல்படும் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றல், முக கவசம் அணிதல் போன்றவைகளை வியாபாரிகள், பொதுமக்கள் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது. இதற்கான உத்தரவை கலெக்டர் பிரியதர்ஷினி நேற்றைய கூட்டத்தில் தெரிவித்தார்.

Tags : Gandhi ,Traders , Trichy: Traders in Trichy Gandhi Market have expressed strong opposition to the closure of retail outlets. Merchants
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!