×

பிரதமர், குடியரசுத்தலைவர் புகைப்படங்கள் வைப்பது குறித்து அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் படங்களுடன், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்கவேண்டும் என 1978ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


அதன்படி, குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் படங்களை வைக்க உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதும், இந்த படங்களை வைக்க வேண்டும் என அந்த அரசாணையில் கட்டாயப்படுத்தப்படவில்லை”. எனத் தெரிவித்தார்.

தலைமை வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என அரசாணை கட்டாயப்படுத்தாத நிலையில், பிரதமர், குடியரசு தலைவர் படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.



Tags : President , சென்னை உயர் நீதிமன்றம்
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்