×

மேச்சேரியில் மின்வாரிய ஊழியர் படுகொலை-அமரர் ஊர்தியை சிறைபிடித்து மறியல்

மேட்டூர் : மேச்சேரி அருகே மின்வாரிய ஊழியர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி சடலத்தை கொண்டு வந்த வாகனத்தை சிறைபிடித்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி நல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன்(54). இவரது மனைவி பானுமதி(46). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் செல்வக்குமார், நொரச்சி வளவு பகுதியைச் சேர்ந்த தமிழ்நிதி மகள் சவுந்தர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகியது முதலே, கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4ம் தேதி சவுந்தர்யா அறை கதவை சாத்திக்கொண்டு நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம். இதனை பானுமதி கண்டித்துள்ளார். இதுகுறித்து சவுந்தர்யா தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே, தமிழ்நிதி மற்றும் அவரது மனைவி சித்ரா, மகன்கள் பிரசாந்த், கோகுல் ஆகியோர் கோவிந்தனின் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் மண்வெட்டி, வீச்சரிவாள் மற்றும் இரும்பு கம்பி கொண்டு சரமாரி தாக்கியுள்ளனர். இதில், கோவிந்தன் படுகாயமடைந்தார். உடனே, அவரை மீட்டு சேலம் அரசு மருததுவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்கு பின்பு நேற்று அமரர் ஊர்தியில் பள்ளிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திரண்டிருந்த கோவிந்தனின் உறவினர்கள், சடலத்தை ஏற்றி வந்த வாகனத்தை திடீரென மறித்தனர். பின்னர், கோவிந்தன் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், மேச்சேரி போலீஸ் இனஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்ததை நடத்தினர். அப்போது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மேட்டூர்- சேலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட கோவிந்தன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சேலம் உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கள உதவியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Machcheri-Amarar , Mettur: The vehicle that brought the body to arrest those involved in the murder of a power plant employee near Mecheri
× RELATED போலாந்து நாட்டு பெண்ணை மணந்த...