×

ஹர்ஷல் படேல் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி

சென்னை: நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தொடக்க லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் மேக்ஸ்வெல், ஜேமிசன், டேன் கிறிஸ்டியன், ரஜத் பத்திதார் ஆகியோர் அறிமுகமாகினர். மும்பை இந்தியன்ஸ் அணியில் மார்கோ ஜான்சென், கிறிஸ் லின் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர். இவர்களில், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மார்கோ ஜான்சென் (20 வயது), கடந்த 2018ல் இந்திய அணி ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் விளையாடுவதற்கு முன்பாக வலைப் பயிற்சியின்போது கோஹ்லிக்கு பந்துவீசி திணறடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ரோகித், கிறிஸ் லின் இருவரும் மும்பை இன்னிங்சை தொடங்கினர். சிராஜ் - ஜேமிசன் வேகக் கூட்டணி நேர்த்தியாகப் பந்துவீச, முதல் 3 ஓவர்களில் மும்பை அணி 12 ரன் மட்டுமே எடுத்தது. சாஹல் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில் ரோகித் (19 ரன், 15 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) பரிதாபமாக ரன் அவுட்டானார். அடுத்து கிறிஸ் லின்னுடன் சூரியகுமார் இணைந்தார். அதிரடியாக விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தனர். சூரியகுமார் 31 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜேமிசன் வேகத்தில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ் வசம் பிடிபட்டார். அரை சதத்தை நெருங்கிய லின் 49 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வாஷிங்டன் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஹர்திக் பாண்டியா 13 ரன், இஷான் கிஷன் 28 ரன் எடுத்து (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஹர்ஷல் வேகத்தில் எல்பிடபுள்யுவாகி வெளியேறினர்.

ஹர்ஷல் வீசிய கடைசி ஓவரில் க்ருணல் பாண்டியா (7), போலார்டு (7), மார்கோ ஜான்சென் (0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி பந்தில் ராகுல் சாஹர் (0) ரன் அவுட்டானார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி கடைசி கட்டத்தில் 1 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 27 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஜேமிசன், சுந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் களமிறங்கியது. வாஷிங்டன் சுந்தர், கேப்டன் கோஹ்லி இருவரும் துரத்தலை தொடங்கினர்.

வாஷிங்டன் சற்று நிதானமாக விளையாட, மறுமுனையில் கோஹ்லி பவுண்டரிகளாக விளாசினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 36 ரன் சேர்த்தது. வாஷிங்டன் 16 பந்தில் 10 ரன் எடுத்து க்ருணல் சுழலில் லின் வசம் பிடிபட்டார். அடுத்து கோஹ்லியுடன் ரஜத் பத்திதார் இணைந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 47 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். மேக்ஸ்வெல் 39, கோஹ்லி 33 ரன் எடுத்தனர். ஹர்ஷல் 4 ரன், சிராஜ் ரன் எதுவும் எடுக்காமல், ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் மார்கோ ஜான்சன், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி நடப்பு சாம்பியனை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

Tags : Harshal Patel ,Mumbai ,RCB , Herschelle Patel bowling brilliantly: RCB beat Mumbai
× RELATED சிஎஸ்கே – ஆர்சிபி கிரிக்கெட்...