×

தேர்தல் முடிந்து 3 நாள் ஆன நிலையில் தலைமை செயலாளர், டிஜிபி திடீர் டெல்லி பயணம்

சென்னை: தேர்தல் முடிந்து 4 நாள் ஆன நிலையில் தலைமை செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் கடந்த 6ம் தேதி முடிந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற கணிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்தநிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், அதே துணையின் இணை செயலாளர் முருகன், தமிழக டிஜிபி திரிபாதி ஆகியோர் இன்று காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

அதில் டிஜிபி திரிபாதி மட்டும் இன்று இரவே சென்னை திரும்புகிறார். மற்ற 3 அதிகாரிகளும் நாளைதான் சென்னை திரும்புகின்றனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடந்த பிப்ரவரி 1ம் தேதிதான் பதவி ஏற்றார். அவர் அதற்கு முன்னர் மத்திய அரசு பணியில் இருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற தகவல் வெளியானது முதல் மத்திய அரசுப் பணிக்குச் செல்ல அவர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டு வந்தது. அதேபோல, டிஜிபி திரிபாதியும் டெல்லி ஆதரவுடன் பணிக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் மத்திய அரசு அவர்களை திடீரென டெல்லிக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தமிழக அதிகாரிகள் டெல்லிக்குச் சென்றது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கானக்கான ஆலோசனைக் கூட்டம் யுபிஎஸ்சி தலைவர் பிரதீப்குமார் ஜோஷி தலைமையில் கூட்டம் நேற்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் நடத்தும். அதேபோலத்தான் இந்த ஆண்டுக்கான கூட்டம் நடந்தது. 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது என்றனர். ஆனாலும், மத்திய அரசின் ஆதரவு பெற்ற அதிகாரிகள் திடீரென டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chief Secretary ,DGP ,Delhi , Chief Secretary, DGP
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி