×

கடைகளில் 2 முறைக்கு மேல் விதிமீறினால் சீல் வைக்கும் மாநகராட்சி டாஸ்மாக் கடைகளில் விதிமீறல் நடந்தால் சீல் வைக்குமா?

சென்னை: கடைகளில் 2 முறைக்கு மேல் விதிகளை மீறினால் சீல் வைக்கும் மாநகராட்சி டாஸ்மாக் கடைகளில் விதிமீறல் நடந்தால் சீல் வைக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி. எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் தினசரி 4,500 பேர் கொரானோ தொற்றால் பாதித்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 5,300 டாஸ்மாக் கடைகளுக்கு எந்த வித கட்டுபாடுகள் விதிக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் வரும் வருவாயை காரணம் காட்டி எந்தவித கெடுபிடிகளும் காட்டாமல் உள்ளனர்..

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா விதிகளை கடைபிடிக்காவிட்டால் அபராதம் வசூலிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி முககவசம் அணியா விட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வே்ணடும். அதை மீறினால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். கொரோனா நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம், கடை, அலுவலக உரிமையாளர்களிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. 2 முறைக்கு மேல் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி நம்புகிறது. ஒருபக்கம் தனியார் நிறுவனங்கள், கடைகளில் விதிகளை மீறினால் அபராதம் வசூலிப்பது, சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் விதிகளை மீறினால் சீல் வைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகளில் தான் அதிகமான விதிமீறல் நடக்கிறது. குறிப்பாக, முக கவசம் அணிந்தால் மட்டுமே மதுபாட்டில் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முக கவசம் அணியாமல் சென்றால் கூட மதுபாட்டில் தருகின்றனர். அதே போன்று, டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலான கடைகளில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால், குடிமகன்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இஷ்டத்திற்கு நின்று கொண்டு மது வாங்கி செல்கின்றனர்.

மாலை நேரங்களுக்கு மேல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்டத்தை அங்கிருக்கும் ஊழியர்களால் கூட கட்டுபடுத்த முடியாத நிலை தான் உள்ளது. இதனால், ஒருவரையொருவர் முண்டியடித்தப்படி கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டபடி மதுபாட்டில்களை குடிமகன்கள் வாங்கி செல்கின்றனர். மேலும், பெரும்பாலான கடைகளில் சானிடைசர் வைக்கப்படவில்லை. இது போன்ற விதிமீறல்களால் டாஸ்மாக் கடைகளில் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அவ்வளவு விதிமீறல் உள்ள இந்த டாஸ்மாக் கடைகளில் கண்காணிக்க அதிகாரிகள் யாரும் இல்லை. மேலும், விதிகளை மீறினால் நடவடிக்கை எடுப்பதும் இல்லை. கடைகளில் விதிகளை பின்பற்ற வலியுறுத்தும் மாநகராட்சி டாஸ்மாக் கடைகளில் உள்ள விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனெ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கடைகள் மூலம் வருமானம் தான் முக்கியம் என்று எண்ணுகிற அரசு குடிமகன்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை என்ற எண்ணத்தில் தான் விற்பனை செய்து வருகிறது. அப்படியிருக்கும் சூழ்நிலையில் கொரோனா பாதிப்பை எப்படி கட்டுபடுத்த முடியும் என்கிற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்தாண்டு மே மாதம் டாஸ்மாக் கடைகளில் நேரக்கட்டுபாடு விதிக்கப்பட்டன. மேலும், குறைந்த பட்ச நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மதுபாட்டில்கள் வழங்கப்பட்டன. இது போன்ற நடைமுறையை மீண்டும் பின்பற்றினால் மட்டுமே கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : Tasmag , Tasmac shop
× RELATED பொது விடுமுறை நாட்களில்...