விமானத்தில் அந்தமான் புறப்பட்ட கல்லூரி மாணவனுக்கு கொரோனா தொற்று: அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு கோ ஏர்வேஸ் விமானம் நேற்று காலை 8.15 மணிக்கு புறப்பட தயாரானது. பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு, பாதுகாப்பு சோதனை முடித்து விமானத்தில் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தமானை சேர்ந்த கல்லூரி மாணவன் மடிம் சுவாமி (21) என்பவரிடம் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழை வாங்கி அதிகாரிகள் சரிபார்த்தனர். அதில், அவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று இருந்தது. உடனே, விமான நிலைய சுகாதார துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, மாணவனிடம் விசாரித்தனர்.

அவர் அந்தமானில் பெற்றோரோடு வசிக்கிறார். நண்பர்களை பார்க்க சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தார். அவருக்கு சிறிது சளிதொல்லை இருந்தது. இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில், கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று வந்தது. அவர் அவசரமாக அந்தமானுக்கு விமானத்தில் சென்றுவிட முடிவு செய்து விமான நிலையத்திற்கு வந்தபோது சிக்கியது தெரிந்தது. பின்னர், அவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு கவச உடைகளை அணிவித்து, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனைர். அதோடு மாணவன் வந்து நின்ற இடம், விமான கவுன்டர் மற்றும் அப்பகுதி முழுவதும் சுகாதாரத் துறையினரால் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

Related Stories:

>