சில்லரை வியாபாரத்துக்கு தடை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் சில்லரை விற்பனை காய்கனி அங்காடிகள் இன்று முதல் (10ம் தேதி) செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, மொத்த வியாபார கடைகள் உள்ளன. தமிழக அரசின் இந்த உத்தரவால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறு, மொத்த வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த சிஎம்டிஏ அதிகாரிகள், தலைமை செயலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறிவிட்டு சென்று விட்டனர். ஆனால், சிஎம்டிஏ அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம்’ எனக்கூறி, அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மார்க்கெட்டில் உள்ள சிறு, மொத்த விற்பனை கடைகளை அடைக்க சிம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தால் அல்லது கடைகளுக்கு சீல் வைத்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவையான சிறு, மொத்த வியாபாரிகள் கடைகளை அடைத்தால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்றனர்.

மேலும், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாத நிலையில், தற்போது மீண்டும் கடைகளை மூடும்படி உத்தரவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே, சமூக இடைவெளியை கடைபிடித்து சிறு, மொத்த வியாபாரிகள் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்,’ என்றனர். இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கடைகளை மூடும் முடிவை வரும் திங்கட்கிழமை வரை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>