×

சூப்பர் கிங்சுக்கு கேப்பிடல்ஸ் சவால்: குருவை மிஞ்சுவாரா சிஷ்யன்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன் 2வது லீக் போட்டியில் இன்று சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் காயம் காரணமாக விலகியதால், ரிஷப் பன்ட் தலைமை ஏற்றுள்ளார்.  சமீபத்திய ஆஸி., இங்கிலாந்து தொடரில் கலக்கியதால் பன்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டெல்லி அணி இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் பயிற்சியாளர் பான்டிங்கும் தீவிரமாக உள்ளார். அது அணிக்கு கூடுதல்  பலமாக இருக்கும். அஷ்வின், தவான், ரகானே, ஸ்டாய்னிஸ், இஷாந்த், வோக்ஸ், உமேஷ், ஸ்மித் என அனுபவ வீரர்களும், அக்சர், பிரித்வி, ரபாடா, ஹெட்மயர் என இளம் வீரர்களும் அடங்கிய டெல்லி வலுவாகவே உள்ளது. இது சென்னை  அணிக்கு கடும் நெருக்கடியை தரும். கடந்த சீசனில் 7வது இடத்தை பிடித்ததுடன் முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாததால், இந்த முறை சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

அதற்கு ஏற்ப அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதியோர் அணி என்ற விமர்சனத்தை பொருட்படுத்தாமல் மொயீன் அலி, புஜாரா, உத்தப்பா என அனுபவ வீரர்களை வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம்... கவுதம்,  ஹரிஷங்கர், ருதுராஜ் கெய்க்வாட், சாம் கரன், ஷர்துல் தாகூர் என இளம் வீரர்களுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். ரெய்னா, ராயுடு, உத்தப்பா, பிராவோ, மொயீன், டு பிளெஸ்ஸி, தாஹிர், சான்ட்னர் ஆகியோரின் அனுபவம் கை  கொடுக்கும். அணியில் உள்ள தமிழக வீரர்களான நாராயணன் ஜெகதீசன், ரவி சாய்கிஷோர், செழியன் ஹரிநிஷாந்த்துக்கு அரிதாக வாய்ப்பு கிடைத்தாலும் அதிசயம்தான். கடந்த சில ஆண்டுகளாக தமிழக வீரர்களை தோனி போதுமான  அளவுக்கு பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறது.

அதேபோல் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள மணிமாறன் சித்தார்த் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இருந்தார். ஆனால், ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் கலக்கியதால் இந்த முறை டெல்லி  வாங்கியுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் கவனம் ஈர்ப்பார். முதல் வெற்றி முனைப்பில் இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. இந்திய அணியில் தோனிக்கு மாற்று ரிஷப் என்ற நிலையில் இருவரும்  கேப்டன்களாக எதிரெதிர் அணியில் களம் காண்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை மோதியதில்...
இரு அணிகளும் 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளதில் சென்னை 15 - 8 என முன்னிலை வகிக்கிறது. 2020 தொடரில் மோதிய 2 போட்டியிலும் டெல்லிதான் வென்றது. அதற்கு முன்பு 2019 தொடரில் மோதிய 3 போட்டிகளிலும்  சென்னை வெற்றி வாகை சூடியது. ஆக இரு அணிகளும் அடையாக மோதிய 5 போட்டிகளில் சென்னை 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக சென்னை 222 ரன், டெல்லி 198 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக  சென்னை 110, டெல்லி 83 ரன் எடுத்துள்ளன.



Tags : Capitals ,Super Kings ,Guru Minchwara , Capitals challenge to Super Kings: Guru Minchwara disciple
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...