பேருந்துகளில் நின்றபடி பயணம் செல்ல அனுமதியில்லை புதுவையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்: திரையரங்குகளில் 50% இருக்கைகள்: கவர்னர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி: புதுவையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 100 இடங்களில் நாளை (11ம் தேதி)  முதல் 14ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம்  நடைபெறும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் கவர்னர் தமிழிசை  சவுந்தரராஜன் கூறுகையில், பக்கத்து மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளால் புதுவையில் மிக தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நூறு சதவீதம் கட்டுப்பாடு என்ற வகையில் 100 இடங்களில் நாளை (11ம் தேதி)  முதல் 14ம் தேதி வரை கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதேபோல் 100 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

புதுவையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இதையும் தாண்டி முகக்கவசம் அணியவில்லை என்றால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  முகக்கவசம் இல்லாமல் யாரும் நடமாடக் கூடாது. வாகனங்களில் செல்லும்போது கூட கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைகள், மால்களில் முகக்கவசம் இல்லாமல் யாரையும் அனுமதிக்கக் கூடாது. கட்டாயம் சானிடைசர்  வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.  திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். பொது விழாக்கள், இலக்கிய விழாக்கள், சமய விழாக்கள், குடும்ப விழாக்கள் என எந்த விழாவாக  இருந்தாலும் ஒரு இருக்கை இடைவெளி விட்டுதான் அமர வேண்டும்.

கோயில்கள் 8 மணி வரை மட்டும் திறந்திருக்கும். அங்கேயும் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 3 ஷிப்ட்டுகளில் தடுப்பூசி போடப்படும். எங்கெல்லாம் கொரோனா தொற்று  அதிகரித்துள்ளதோ, அங்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்படும். பொதுமக்கள் அச்சமின்றி வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைத்து இடங்களிலும் கபசுர குடிநீர் வழங்கப்படும்.  புதுவையில் தொற்று பரவலை  கட்டுப்படுத்துவதற்காக இன்று (10ம் தேதி) முதல் இரவு 12 மணி மணி முதல் அதிகாலை 5 மணி வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் இருக்கையில் அமரலாம். ஆனால் நின்றபடி பயணம்  செய்ய அனுமதி கிடையாது. ஆட்டோக்களில் 2 பேர் தான் செல்ல வேண்டும். ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டும். இவற்றை கடைபிடித்தால் கொரோனாவை நாம் கட்டுப்படுத்தி விடலாம், என்றார். 

Related Stories:

>