×

வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வேளச்சேரி தொகுதியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து மின்னணு இயந்திரங்களை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற விவகாரம் விஸ்வரூபமாகி உள்ளது. அங்கு மறுதேர்தல் நடந்தப்படுமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பொதுவாக அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேளச்சேரி தொகுதியில் மட்டும், ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை இரண்டு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவின்போது பழுதானால் பயன்படுத்துவதற்காக கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. இதில் பயன்பாட்டில் இருந்த ஒரு விவிபேட் இயந்திரம்
பழுதானதால் அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது. அங்கு, 50 நிமிடம் பயன்படுத்திவிட்டு வேறு விவிபேட் இயந்திரம் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், இது தேர்தல் நடைமுறைக்கு எதிரான நடவடிக்கையாகத்தான் கருதப்படுகிறது. இது மண்டல குழு அதிகாரிகள் ராணுவ பாதுகாப்புடன்தான் வேறு மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்று மின்னணு இயந்திரங்களை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

வேளச்சேரியில் நடந்த சம்பவம் குறித்து அந்த வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றிய அதிகாரிகள் விவரமாக அறிக்கை கொடுத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளரும் அறிக்கை கொடுத்துள்ளனர். இவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம்தான் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமா, இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதில் இரண்டு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு ஆகவில்லை. விவிபேட் இயந்திரம் மட்டும் 50 நிமிடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் 15 வாக்கும் பதிவாகி உள்ளது. பழுதானதால், அதை எடுத்துக் கொண்டு வெளியே செல்லக்கூடாது. கண்டிப்பாக, இது பெரிய அளவிலான தவறான நடைமுறைதான். காரில், ராணுவம், போலீஸ் பாதுகாப்புடன்தான் பழுதான இயந்திரங்களை கூட எடுத்துச் செல்ல வேண்டும். கண்டிப்பாக தேர்தல் ஆணையத்திற்கும் இதில் நிறைய சந்தேகம் வர வாய்ப்புள்ளது. 2 வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு கண்ட்ரோல் யூனிட், ஒரு விவிபேட் இயந்திரத்தை இரண்டு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த வாக்குப்பதிவு மையத்தில் 200 வாக்குகள் உள்ளது. அதில் 15 வாக்குகள் இந்த இயந்திரத்தில் பதிவாகியுள்ளது.

இதில் மூன்று விதமான விசாரணை நடைபெறும். போலீஸ் தரப்பில் முதல் விசாரணை நடைபெறும். 2வது, எத்தனை பேர் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் பார்க்கும். 3வது, இந்த இயந்திரத்தை ஏன் வெளியே எடுத்து சென்றீர்கள், அதனால் மறுவாக்குப்பதிவு நடத்தலாமா என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும்.

காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளோம். மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, தேர்தல் சிறப்பு பார்வையாளர், தேர்தல் பார்வையாளர் ஆகியோர் அளித்த அறிக்கையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி மட்டுமல்லாமல், மற்ற தொகுதிகளில் நடந்த பிரச்னைகள் குறித்து தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பி வைப்பார்கள். பின்னர் இதுகுறித்து ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கருத்து கேட்பார்கள். மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கும். தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் அனைத்தும் தொகுதி வாரியாக 75 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி காலை 8 மணிக்கு அந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கூட சில இடங்களில் குறைவான வாக்குப்பதிவு நடந்திருக்கலாம். காரணம், கொரோனாவுக்கு பயந்து சிலர் 6, 7 மாதமாக கூட வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் தெளிவாக ஆய்வு செய்ததில் இறுதியாக 72.81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைவாக வாக்குப்பதிவு நடந்த பகுதிகளில், அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். தேர்தல் ஆணையம் கடந்த 6 மாதமாகவே, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று சோதனை செய்து பாருங்கள் என்று பொதுமக்களிடம் கூறி வருகிறோம். ஆனாலும், பொதுமக்கள் கடைசி நேரத்தில்தான் பார்த்துவிட்டு பெயர் இல்லை என்று புகார் அளிக்கிறார்கள். சென்னையில் கூட நிறைய வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக புகார் வருகிறது. என்ன காரணத்துக்காக பெயர் எடுக்கப்பட்டது என்பது குறித்து பரிசோதனை செய்யப்படும். நிறைய இடங்களில் ஆண், பெண் வாக்காளர்கள் என தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறினார். ஏற்கனவே 2 நாட்களுக்கு முன் தமிழகம் முழுவதும் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Velachery ,Chief Electoral Officer ,Tamil Nadu Information , Chief Electoral Officer
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...