தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட தோட்டக்கலை கல்லூரிக்கு சொந்தமான நிலத்தை திரும்ப பெற வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கோலார்: மாநில அரசின் தோட்டக்கலை கல்லூரிக்கு சொந்தமான நிலத்தில் 10 ஏக்கரை தனியார் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்துள்ளதை  உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோலார் மாவட்டத்தில் இயங்கிவரும் மாநில தோட்டக்கலை துறை கல்லூரிக்கு கசபா ஒன்றியத்தில் நிலம் உள்ளது. இதில் 10 ஏக்கர் நிலம் தனியார்  மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு  கோலார் மாவட்ட விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து துணைத்தலைவர் நாராயணகவுடா கூறியதாவது, ``செய்யும் தொழிலே தெய்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப வேளாண் தொழிலை நம்பி  வாழ்க்கை நடத்திவரும் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். அவர்களின் ஒரே முதலீடு நிலம் மட்டுமே. மாநில அரசின் தனியார் மயமாக்கல்  கொள்கை மற்றும் விவசாயிகளை வஞ்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்டகாசம் ஆகியவற்றால் நாளுக்கு நாள் வேளாண் தொழில் நசிந்து  வருகிறது.

 இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பிடி உணவுக்கும் வெளிநாட்டினரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை நினைத்து பார்க்க  வேண்டும். ‘‘ஜெய் ஜவான்-ஜெய் கிஷான்’’ என்ற முழக்கம் எழுப்பி விவசாயிகளை எழுச்சிப்படுத்துவதாக கூறி மறைமுகமாக நாசம் செய்யும் தொழிலை  மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. நல்ல பலன் கொடுத்து வரும் விளை நிலங்களை வளர்ச்சி என்ற பெயரில் கையகப்படுத்தி  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் ரியல் எஸ்டேட் தொழிலை அரசாங்கம் செய்து வருகிறது.   கோலார் புறநகரில் மாநில அரசின் தோட்டக்கலை  துறையின் கீழ் தோட்டக்கலை கல்லூரி இயங்கி வருகிறது. அதற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. 99  ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நிலம் வழங்கியுள்ளதால், எதிர்காலத்தில் தோட்டக்கலை கல்லூரியை மேம்படுத்தினால், நிலம் கிடைக்காத நிலை  ஏற்படும்.

அரசு நிலத்தை குத்தகை எடுத்தவர்கள் யாரும் ஒப்பந்தப்படி திருப்பி கொடுத்ததாக வரலாறு இல்லை. குத்தகை காலம் முடிந்து நிலத்தை  திருப்பி கேட்டால், நீதிமன்றம் சென்று விடுவார்கள். தோட்டக்கலை கல்லூரிக்கு இந்த நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால் மருத்துவமனைக்கு  வழங்கியுள்ள நிலத்தை திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.அரசு நிலத்தை குத்தகை எடுத்தவர்கள் யாரும் ஒப்பந்தப்படி திருப்பி  கொடுத்ததாக வரலாறு இல்லை. குத்தகை காலம் முடிந்து நிலத்தை திருப்பி   கேட்டால், நீதிமன்றம் சென்று விடுவார்கள்

Related Stories:

>