சிவகங்கையில் புது குழப்பம்: ஒரே எண்ணில் இரண்டு கார்கள்: அதிகாரிகள் அதிர்ச்சி

சிவகங்கை:  சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எண் உள்பட அனைத்து ஆவணங்களும் ஒன்றாக இருக்கும் 2 கார்கள் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடியை சேர்ந்தவர் உமாதேவி. இவர் கடந்த 2014ம்  ஆண்டு டிஎன்.69 ஏஎம். 4777 என்ற எண்ணுடைய கார் வாங்கி பயன்படுத்தி வந்தார். இந்த காரை கடந்த வாரம் கன்னியாகுமரி அழகாபுரத்தை சேர்ந்த முத்துதுரை என்பவருக்கு ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதன்பின் தூத்துக்குடி  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்ய சென்றனர். அப்போது இதே எண்ணுடைய கார் ஏற்கனவே சிவகங்கையில் வேறொரு நபர் பெயரில் உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சிவகங்கை  வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேற்று வந்து விசாரித்தனர்.

அப்போது சிவகங்கையை சேர்ந்த முத்துகணேஷ்  என்பவர், இதே எண் உடைய காரை பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து  முத்துகணேஷை காருடன் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வருமாறு அலுவலர்கள்  அழைத்தனர். அவரும் தனது காரை கொண்டு வந்து நிறுத்தியதும் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. முத்துகணேஷ், மதுரை புரோக்கர் மூலமாக தூத்துக்குடியில் தனியார் கார் விற்பனை நிலையத்தில் இந்த காரை 20 நாட்களுக்கு முன்பு  வாங்கியிருக்கிறார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டு கார்களின் எண், சேஸ் நம்பர், கலர் மற்றும் ஸ்மார்ட் கார்டு ஆவணங்களை  போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அனைத்து ஆவணங்களும் ஒன்றாக இருந்தன. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் கூறுகையில், ‘‘‘‘அனைத்துமே ஒன்றாக இருக்கும் வகையில் மிக நூதனமான முறையில் மோசடி செய்துள்ளனர். கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து  சிவகங்கை நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் உண்மை தெரிய வரும்’’ என்றார்.

Related Stories:

>