திருப்பூரில் மகன், மகளுடன் தாய் தற்கொலை: பராமரிக்க ஆட்கள் இல்லாததால் பரிதாபம்

திருப்பூர்: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வி (47). இவர் கடந்த 20 ஆண்டுகளாக திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவை அடுத்துள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் தனது மகன் அஸ்வின் (19), மகள் அகல்யா (17) ஆகியோருடன் வசித்து  வந்தார். இவரது கணவர் ராகவன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சாலை விபத்தில் அகல்யாவிற்கு ஒரு கையும், அஸ்வினுக்கு ஒரு காலும் துண்டானது. ராகவன்  இறந்த நிலையில் இவர்களை பராமரிக்க முடியாமல் செல்வி திணறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீலகிரியில் உள்ள செல்வி தங்கை மகாலட்சுமியை போனில் தொடர்பு கொண்டு, ‘‘எங்களை பராமரிக்க ஆட்கள் இல்லை.  எங்களால் இனி வாழ முடியாது. எனவே 3 பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம்’’ என தெரிவித்துவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி உடனடியாக நேற்று திருப்பூருக்கு விரைந்து வந்தார். செல்வியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு செல்வி, அஸ்வின், அகல்யா ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இது குறித்து ஊத்துக்குளி  போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>