×

களக்காடு அருகே பரபரப்பு: நாட்டு வெடிகுண்டுகளுடன் கூலிப்படையினர் சிக்கினர்

*காதல் விவகாரத்தில் வாலிபரை கொல்ல முயன்றதாக தகவல்
*முக்கிய பிரமுகர்களுக்கு குறி வைத்தார்களா? போலீஸ் விசாரணை

களக்காடு: காதல் விவகாரத்தில் வாலிபரை கொல்ல களக்காட்டில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது பொத்தையடி அருகே சாலையோரம் பதுங்கியிருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அவர்களை போலீசார், பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் நடுத்தெருவைச் சேர்ந்த பாவநாசம் மகன் முத்துமனோ (27), களக்காடு அருகே உள்ள பொத்தையடி தெற்கு தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மாதவன் (19), ஆறுமுகநயினார் மகன் சந்திரசேகர் என்ற சேகர் (22), பணகுடி துரை மகன் விக்னேஷ் (17), களக்காடு பெத்தானியா சர்ச் தெரு சாதுசுந்தர்சிங் மகன் அருள்துரைசிங் என்ற கண்ணன் (23) ஆகியோர் என்பதும், இவர்கள் கூலிப்படையாக செயல்படுவதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் களக்காடு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு வைத்து தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், காதல் விவகாரத்தில் பணகுடி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை தீர்த்துக் கட்டுவதற்காக பொத்தையடியில் பதுங்கியிருந்ததாகவும், அதற்குள் போலீசார், தங்களை சுற்றி வளைத்துவிட்டதாகவும் கூறியதாக தெரிகிறது.

இருப்பினும் அவர்கள் சொல்வது உண்மைதானா அல்லது வேறு முக்கிய பிரமுகர்களை தீர்த்துக்கட்டுவதற்கு பதுங்கியிருந்தார்களா, கூலிப்படையினரை களக்காடு பகுதிக்கு வரவழைத்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு பகுதியில் கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக கூலிப்படையினர் அட்டகாசம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே இவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து கூலிப்படையினரின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Kalakadu , Riots near Kalakadu: Mercenaries trapped with country bombs
× RELATED களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்