22 வீரர்கள் உயிரிழப்பு; கடத்தப்பட்ட ‘கோப்ரா’ படை வீரர் விடுவிப்பு: நக்சல்களின் ‘ஜன் அதாலத்’ கோர்ட்டில் நடந்தது என்ன?; நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நக்சல்களால் கடத்தப்பட்ட ‘கோப்ரா’ படை வீரர் 6 நாட்களுக்கு பின் நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டார். இவ்விவகாரத்தில் நக்சல்களின் ‘ஜன் அதாலத்’ நீதிமன்றத்தில் நடந்த விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் - சுக்மா மாவட்ட வனப்பகுதியில் கடந்த 3ம் தேதி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்முவைச் சேர்ந்த 35 வயது கோப்ரா படை வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் என்பவர் காணாமல் போனார். இந்நிலையில் ராகேஷ் வர் சிங்கை தாங்கள் சிறை பிடித்து வைத்துள்ளதாகவும், அவரை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவின் பெயரை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் நக்சல் அமைப்பு தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, ராகேஷ்வர் சிங் வனப்பகுதியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை நேற்று முன்தினம் நக்சல் அமைப்பு வெளியிட்டது. அதன்பின் ராகேஷ்வர் சிங்கை நக்சல்களிடம் இருந்து மீட்டுத்தரக் கோரி அவரது குடும்பத்தினரும், நூற்றுக்கணக்கான மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவரை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக ஜம்மு- காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். இந்நிலையில் 6 நாட்களுக்கு பின் நேற்று ராகேஷ்வர் சிங் மன்ஹாசை நக்சல்கள் விடுவித்தனர். அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து கடத்தப்பட்ட வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் கூறுகையில், ‘கடந்த ஆறு நாட்களாக நக்சல்கள் கட்டுப்பாட்டில் இருந்த என்னை அவர்கள் துன்புறுத்தவில்லை. சம்பவம் நடந்த நாளன்று நக்சலைட்டுகள் என்னை சுற்றிவளைத்து, அமைதியாக சரணடையுமாறு கேட்டுக் கொண்டனர். வேறுவழியின்றி கல்குடா-ஜோனகுடா அருகே அவர்களிடம் சரணடைந்தேன். அதன்பின்னர் அவர்கள் எனது கண்ணை துணியால் கட்டி வனப்பகுதியில் எங்கு அழைத்துச் சென்றனர் என்பது தெரியவில்லை. அவர்கள் உள்ளூர் வட்டார மொழிகளில் பேசினர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் எனது கண்களை துணியால் கட்டி அழைத்து சென்றனர்.

காந்திய ஆர்வலர் தரம்பால் சாய்னி மற்றும் கோண்ட்வானா சமூகத் தலைவர் முரியா தாரேம், சமூக ஆர்வலர் சோனி சோரி ஆகியோர் நக்சல்களை சந்திக்க வனப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் நக்சல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் என்னை விடுவிப்பது தொடர்பாக தெக்ல்மெட்டா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் ‘ஜன் அதாலத்’ என்ற நீதிமன்றத்தை கூட்டினர். இதில், 20 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர் பங்கேற்றனர். அங்கு நக்சல்கள் அவர்களுக்குள் நீண்ட நேரம் பேசிக் கொண்டனர். பின்னர் என்னை விடுவிப்பதாக அறிவித்தனர். தொடர்ந்து, என்னை தர்பால் சாய்னியிடம் ஒப்படைத்தனர். அதன்பின், உள்ளூர் பத்திரிகையாளர்கள் உதவியுடன் பைக்கில் அனுப்பி வைக்கப்பட்டேன்.

தாரேம் முகாமில் இருந்த சிஆர்பிஎஃப் டிஐஜி கோமல் சிங்கிடம் என்னை மத்தியஸ்த குழு ஒப்படைத்தது’ என்றார். ராகேஷ்வர் சிங் உயிருடன் மீட்கப்பட்ட விஷயத்தில் நக்சல்கள் தரப்பில் ஏதேனும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதா? அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளித்த பின்னர் விடுவிக்கப்பட்டாரா? என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தும், நக்சல்கள் தரப்பில் நிபந்தனைகள் ஏதுமின்றி வீரர் மீட்கப்பட்ட சம்பவம் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

‘பஸ்தாரின் காந்தி’ யார்?

காந்தியவாதியான தர்பால் சாய்னியை, சட்டீஸ்கர் பழங்குடியின மக்கள் ‘பஸ்தாரின் காந்தி’ என்று அழைக்கின்றனர். 91 வயதான தரம்பால் சாய்னி, சுதந்திர போராட்ட வீரர் ஆச்சார்யா வினோபா பாவேயின் சீடராக இருந்தார். கடந்த 1979ம் ஆண்டு முதல் பஸ்தாரில் உள்ள பெண்களின் கல்விக்காக தொடர்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 1992ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது. ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் விவகாரத்தில் தர்பால் சாய்னி நக்சல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட, அவர்கள் ‘ஜன் அதாலத்’ என்ற நீதிமன்ற முறையை பின்பற்றி நீண்ட விசாரணைக்கு பின்னரே அவரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: